உலகின் நம்பிக்கையை இழந்துள்ள ஜப்பான்
2023-02-28 10:33:14

ஃபுகுஷிமா அணு மின் நிலைய விபத்து நிகழ்ந்த 12 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜப்பானிய அரசு பொது மக்களின் ஆதரவை மீண்டும் பெறாதது மட்டுமல்லாமல், உலகின் நம்பிக்கையை இழக்கும் நடவடிக்கைகளை செய்து வருகிறது.

அணு கழிவு நீரை கடலில் வெளியேற்றும் திட்டம் பற்றி விளக்கிக் கூறும் விதம், ஜப்பானின் பொருளாதாரம் வர்த்தம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பிப்ரவரி 25ஆம் நாள் ஃபுகுஷிமா மாகாணத்தில் கூட்டம் ஒன்றை நடத்தினார். முன்பைப் போலவே, உள்ளூர் மீன்பிடிப்பு துறையினர் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இவ்வாண்டின் வசந்தம் மற்றும் கோடைகாலத்தில் அணு கழிவு நீரை கடலில் வெளியேற்ற முயற்சிக்கும் ஜப்பான் மீது உள்நாட்டிலும் உலகளவிலும் அதிக சந்தேகமும் எதிர்ப்பும் ஏற்பட்டுள்ளது.

மேலும், பசிபிக் தீவுகள் மன்றத்தின் கீழ் அண்மையில் நடைபெற்ற சிறப்புத் தலைவர்கள் முறைசாரா கூட்டத்தில் பல்வேறு நாட்டுத் தலைவர்கள் ஜப்பானின் இத்திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடலில் கழிவு நீரை வெளியேற்றுவது ஜப்பானின் சொந்த விவகாரம் அல்ல. தெற்கு பசிபிக் தீவு நாடுகள் உள்பட முழு உலகிற்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய விவகாரமாகும். அறிவியல் அடிப்படையில் தரவுகளின் மூலம் இத்திட்டத்துக்கு ஜப்பான் வழிக்காட்ட வேண்டும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

கடல் என்பது, பல்வேறு நாடுகளின் வாழ்வு மற்றும் வளர்ச்சிக்கான அடிப்படையாகும். கடல் சட்டத்துக்கான ஐ.நா. பொது ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட நாடான ஜப்பான், கடல் சூழ்நிலையைப் பாதுகாக்க வேண்டும். அணு கழிவு நிரைக் கையாள்வதற்கு ஜப்பான் 5 திட்டங்களை வரைந்தது. ஆனால், கடலில் கழிவு நீரை வெளியேற்றுவதன் செலவு இவற்றில் மிகவும் குறைவு. உலகின் நம்பிக்கையை இழந்துள்ள ஜப்பான் இத்திட்டத்தின்படி செயல்பட்டால், வரலாற்றில் குற்றவாளியாக பதிவு செய்யப்படும்.