சீனாவும் இந்தியாவும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்த உறுதியளித்தன
2023-03-03 17:43:21

சீன வெளியுறவுத் துறை அமைச்சர் சின் காங், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகளை மேம்படுத்த இரு தரப்பினரும் உறுதியளித்தனர்.

புதன் முதல் வியாழன் வரை நடைபெற்ற ஜி20 நாடுகளின்  வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் போது, இச்சந்திப்பு நடைபெற்றது.

சீனா மற்றும் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் புத்துயிர், வளரும் நாடுகளின் வலிமையைக் காட்டுகிறது. இது உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினரின் எதிர்காலத்தையும், ஆசியாவின் எதிர்காலத்தையும் மற்றும் முழு உலகத்தையும் மாற்றும் என்று சின் காங் கூறினார்.

இரு தரப்புகளும், உலகில் ஒரு நூற்றாண்டுக்கு ஒருமுறை ஏற்படும் மாற்றங்களின் பின்னணியில்,இருதரப்பு உறவுகளைப் பார்க்க வேண்டும். அந்தந்த தேசிய மறுமலர்ச்சியின் கண்ணோட்டத்தில் இருதரப்பு ஒத்துழைப்பைப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் நவீனமயமாக்கலுக்கான பாதையில் பங்காளிகளாக இருக்க வேண்டும் என்று சின் காங் கூறினார்.

எல்லையில் தற்போதைய நிலைமை படிப்படியாக சீரடைந்து வருவதாகவும், எல்லைப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஜெய்சங்கர் கூறினார்.

ஜி20 தலைவராக இந்தியா செயல்படுவதற்குச் சீனாவின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த ஜெய்சங்கர், பலதரப்பு விவகாரங்களில் தகவல் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பைப் பேணிக்காக்க விரும்புவதாக தெரிவித்தார்.