பெய்ஜிங்கில் வெற்றி பெற்ற சௌதி அரேபியா-ஈரான் பேச்சுவார்த்தை
2023-03-12 17:00:37

சீனா, சௌதி அரேபியா, ஈரான் ஆகிய 3 நாடுகள் மார்ச் 10ஆம் நாள் பெய்ஜிங்கில் வெளியிட்ட கூட்டறிக்கை உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், சௌதி அரேபியாவும் ஈரானும் தூதாண்மை உறவை மீண்டும் தொடங்க ஒப்பு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3 நாடுகளும் கூட்டாக முயற்சிகளை மேற்கொண்டு, சர்வதேச மற்றும் பிரதேச அமைதியையும் பாதுகாப்பையும் முன்னேற்றும் என்றும் இக்கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலை நாட்டு ஊடகங்கள் உள்ளிட்ட பல சர்வதேச ஊடகங்கள் இதற்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளன. ஈராக், ஓமன், லெபனான் உள்ளிட்ட நாடுகள் இப்பேச்சுவார்த்தையின் சாதனைக்கு வரவேற்பு தெரிவித்தன. மேலும், வளைகுடா பிரதேசத்தின் நிலைத் தன்மைக்கு இது துணை புரியும் என்று ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்ரேஸ் தெரிவித்தார்.

சௌதி அரேபியா-ஈரான் பேச்சுவார்த்தை பெய்ஜிங்கில் நடைபெற்றதன் காரணம் என்ன? மத்திய கிழக்கு நாடுகள் சுய நிர்ணயத்துடன் பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வின் மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குச் சீனா எப்போதுமே ஆதரவு அளித்து, மத்திய கிழக்கு நாடுகளின் நம்பத்தக்க நண்பராகத் திகழ்கிறது. 3 நாட்டுத் தலைவர்கள் உருவாக்கிய பொதுக் கருத்தின் அடிப்படையில் இப்பேச்சுவார்த்தை முன்னேற்றப்பட்டது.

சிக்கலான பிரச்சினைகள் அல்லது கடும் அறைக்கூவல்களைச் சந்திக்கும் போது, ஒன்றுக்கொன்று மதிப்பு அளித்து சமநிலை பேச்சுவார்த்தை மேற்கொண்டால், தீர்வு வழிமுறைகளை காண முடியும் என்று இந்த வெற்றிகரமான பேச்சுவார்த்தை வெளிப்படுத்தியுள்ளது.