நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 15 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்கக் கூடும்
2023-03-16 10:37:05

2022-2023ம் நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி கடந்த நிதியாண்டை விட 15 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்கக் கூடும் என அரசும் நிபுணர்களும் 15ஆம் நாள் புதன்கிழமை எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

இது தொடர்பாக, வணிக மற்றும் தொழிற்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், 2022ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி வரையிலான காலத்தில், இந்தியாவின் மொத்த ஏற்றுமதி அளவு, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 16.18 சதவீதமாக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளதாகவும், நடப்பு நிதியாண்டு முடிவடைவதற்கு இன்னும் ஒரு மாதம் இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதில், முதல் 11 மாத காலத்தில் வணிகப் பொருட்களின் ஏற்றுமதி கடந்த ஆண்டை விட 7.55 சதவீதம் அதிகரித்துள்ளது. அதுபோன்றே சேவை ஏற்றுமதி வலுவான வேகத்தில் 30.48 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதுபற்றி, இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஏ.சக்திவேல் கூறுகையில், நிலையற்ற புவி சார் அரசியல், பணவீக்க உயர்வு, குறைந்துள்ள தேவைகள், உயர்ந்த வட்டி விகிதம் உள்ளிட்ட காரணிகளின் பாதிப்பு இருந்த போதிலும் ஏற்றுமதி அதிகரித்திருப்பது  என்பது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவித்தார்.