நோர்ட் ஸ்ட்ரீம் வெடிப்பு பற்றி முழு அளவிலான புலனாய்வு செய்ய வேண்டும்
2023-03-24 11:37:54

உக்ரைனுக்கு ஆதரவான குழு நோர்ட் ஸ்ட்ரீம் குழாயை வெடித்துத் தகர்த்தது பற்றிய தகவல் போலிச் செய்தியாகும். உண்மையை மூடிமறைக்கும் விதமாக அமெரிக்க உளவுத் துறை இச்செய்தியை உருவாக்கி பரப்பியுள்ளதாக அமெரிக்காவின் மூத்த செய்தியாளர் சேமோர் ஹேர்ஷ் மார்ச் 22ஆம் நாள் சமூக ஊடகத்தில் மீண்டும் பதிவிட்டுள்ளார்.

கடந்த முறை போலவே, தனது கூற்றுக்குத் தேவையான அதிகமான விவரங்கள் மற்றும் ஆதாரங்களையும் அவர் வழங்கியுள்ளார். ஜெர்மன் தலைமை அமைச்சர் அமெரிக்காவில் பயணம் மேற்கொண்ட போது ஷோல்ஸ் அமெரிக்க அரசுத் தலைவர் பைடனுடன் நோர்ட் ஸ்ட்ரீம் வெடிப்பு பற்றி விவாதித்ததாகவும், அதனைத் தொடர்ந்து ஜெர்மன் கூட்டாட்சி புலனாய்வு நிறுவனத்துடன் ஒத்துழைத்து, நோர்ட் ஸ்ட்ரீம் வெடிப்பு சம்பவத்தின் உண்மையை மூடிமறைக்கும் முகப்புக் கதை ஒன்றைப் புனைக்கும் கடமையை மத்திய புலனாய்வு நிறுவனம் உத்தரவின்படி ஏற்றுக் கொண்டதாகவும், தகவல் தெரிந்த தூதாண்மை அதிகாரி ஒருவரின் கூற்றை மேற்கோள்காட்டி அவர் வெளிப்படுத்தினார்.

ஹேர்ஷ் வெளியிட்ட தகவல் உண்மையாக இருக்கும் நிலையில், ஐ.நாவின் தலைமையில் இச்சம்பவம் பற்றி சர்வதேச புலனாய்வு மேற்கொள்வது அவசியம். அமெரிக்காவின் உளவு நிறுவனங்கள் மற்றும் ஊடகங்கள் அரசுடன் ஒத்துழைத்து போலியான செய்திகளை உருவாக்குவது வழக்கம் என்பதை கருத்தில் கொண்டால், ஹேர்ஷின் கூற்று உயர் நம்பத்தக்க தன்மை வாய்ந்ததாக உள்ளதை கவனத்தில் கொள்ளலாம்.

இச்சம்வத்துக்கான ஆதாரங்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அரசு சர்வதேச சமூகத்தின் ஐயங்களுக்குப் பதிலளித்து, ஐ.நா. தலைமையில் சர்வதேச புலனாய்வு மேற்கொள்வதற்கு ஆதரவளிக்க வேண்டும்.