இராணுவ இரகசியங்களின் கசிவு பற்றி அமெரிக்கா தனது கூட்டணி நாடுகளுக்கு எவ்வாறு விளக்கும்?
2023-04-13 10:51:54

அமெரிக்காவின் உயர்நிலை இராணுவ இரகசிய உளவு ஆவணங்கள் மார்ச் தொடக்கத்திலிருந்து, ஏன் இதற்கு முன்னதாகவே கூட, இணையதளங்களில் வெளியாகி வருகின்றன. ரஷிய-உக்ரைன் மோதலில் அமெரிக்க அரசின் ஆழ்ந்த தலையீடு, உக்ரைன், தென் கொரியா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் உயர் அதிகாரிகளை ஒற்றுக்கேட்டல் உள்ளிட்டவை இந்த ஆவணங்களில் அடக்கம். 2013ஆம் ஆண்டில் விக்கிலீக்ஸ் சம்பவத்துக்குப் பிறகு நடைபெற்ற மிகவும் மோசமான சம்பவமாக இது திகழ்கிறது.

இது தொடர்பாக அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஏப்ரல் 11ஆம் நாள் வெளிப்படையான கருத்தை முதன்முறையாகத் தெரிவித்த போது, இரகசிய உளவு ஆவணங்கள் வெளிவந்த ஒரு மாதத்துக்குப் பிறகே, இது பற்றி கேள்விப்பட்டதாகக் கூறினார். இதனிடையே, இராணுவ இரகசியங்களை வெளியிட்ட நபர்களைக் கண்டுபிடிக்க முழுமுயற்சி செய்யும் என்றும் அமெரிக்க அதிகார வட்டாரம் தெரிவித்தது. இராணுவ இரகசியங்கள் கசிந்த சம்பவத்தின் உண்மையையும், கூட்டணி நாடுகளுக்கு இதனால் ஏற்படக்கூடிய பாதிப்பையும் ஏற்றுக்கொள்வதற்கு இது சமம்.

கடந்த பல ஆண்டுகளாக கூட்டணி நாடுகளை அமெரிக்கா ஒற்றுக்கேட்டு வருவது என்பது வெளிப்படையாகத் தெரிந்த இரகசியமாகும். அமெரிக்காவின் மேலாதிக்க சிந்தனையில், அதற்கு உண்மையான கூட்டணி நாடு என ஒன்றும் இல்லை. ஒற்றுக்கேட்டல் என்பது, அமெரிக்காவுக்கு உலகளவில் நன்மை கிடைக்கும் ஒரு வழிமுறையாகும்.

அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கிஸிங்கர், அமெரிக்காவின் எதிரியாக இருப்பது ஆபத்தானது என்றால், அதன் நண்பராக இருப்பது என்பது ஆபத்தை விட மோசமான ஒன்று எனக் கூறியது இங்கு நினைவுகூரத்தக்கது.