ஸ்பேஸ்-எக்ஸின் ராக்கெட் சோதனை தோல்வி
2023-04-21 10:35:13

அமெரிக்க ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் தயாரித்து 20 ஆம் நாள் முதன்முறையாக விண்ணில் செலுத்திய ஸ்டார் ஷிப் எனும் புதிய பிரம்மாண்ட ராக்கெட்டின் ஏவுதல் சோதனை தோல்வி அடைந்தது. இது விண்ணை நோக்கி செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே வெடித்து சிதறியது. வெடிப்புக்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

ஸ்டார் ஷிப் ராக்கெட்டின் உயரம் 120 மீட்டராகும். மனிதர்களையும் சரக்குகளையும் பூமியின் சுற்றுவட்டப்பாதை, சந்திரக் கிரகம், செவ்வாய்க் கிரகம் ஆகியவற்றுக்கு அனுப்பும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்த ராக்கெட் மீண்டும் பயன்படுத்தப்படக் கூடியது.

ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனரும் முதன்மை நிர்வாக அதிகாரியும் முதன்மை பொறியியலாளருமான எலான் மஸ்க் ட்விட்டர் பதிவில் கூறுகையில், ஸ்பேஸ் ஷிப் ஏவுச் சோதனையில் ஏராளமான தகவல்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும், சில திங்களுக்குப் பிறகு அந்த ராக்கெட்டை மீண்டும் ஏவி சோதிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.