இலங்கையில் ஏஐ செயல்குழு அமைப்பு
2023-05-01 17:25:38

இலங்கையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பப் பயன்பாட்டை முன்னெடுக்கும் விதம் செயல் அறிக்கை தயார் செய்வதற்காக நிபுணர்கள் அடங்கிய செயல்குழுவை அமைக்க தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு அரசுத் தலைவர் ரணில் விக்ரமசிங்கே ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

வேளாண்மை, கல்வி, சுகாதாரம், மீன்பிடித்தல் மற்றும் தொழில்துறை ஆகிய துறைகளில் செயற்கை தொழில்நுட்பத்துக்கு உள்ள ஆற்றல் பற்றி அவர் ஆலோசித்ததாக அரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் மூலம் கிடைக்கும் நாட்டின் வருவாய் சுமார் 190 கோடி டாலராக உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏஐ பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்று விக்ரமசிங்கே கேட்டுக்கொண்டார். தற்போது ஆண்டுதோறும் 2,500 பொறியியலாளர்கள் மட்டுமே உருவாகி வருகின்றனர் என்றும் எண்ணியல் யுகத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய குறைந்தது 10 ஆயிரம் பொறியியலாளர்களை உருவாக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.