கடன் உச்சவரம்பு குறித்து அமெரிக்க நிதி அமைச்சரின் எச்சரிக்கை
2023-05-17 16:43:57

அமெரிக்காவின் கடன் உச்சவரம்பு குறித்து, ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இடையேயான பேச்சுவார்த்தை தேக்க நிலையில் உள்ளது. தற்போது வரை, இது பற்றிய பேச்சுவார்த்தையில் தெளிவான முன்னேற்றம் அடையவில்லை.

அந்நாட்டின் நிதி அமைச்சர் ஜேனட் எல்லன், 24 மணி நேரத்திற்குள் 2 முறை எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அவர் 15ஆம் நாள் அனுப்பிய கடிதத்தில் ஜூன் திங்கள் 1-ஆம் நாளுக்குள், வெகுவிரைவில் நடவடிக்கைகளை மேற்கொண்டு, கடன் உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்றும் இல்லையென்றால், அமெரிக்கா கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றம் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருந்தால், அமெரிக்கா கடும் பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொள்ளும். இதன் காரணமாக, பொருளாதார வீழ்ச்சி, வேலை வாய்ப்பு இழப்பு ஆகியவை ஏற்படக்கூடும்  என்று 16ஆம் நாள் நடைபெற்ற வங்கித் துறை கூட்டம் ஒன்றில் அவர் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடன் உச்சவரம்புப் பிரச்சனையைத் தீர்க்காமல் இருந்தால், அமரிக்க பெடரல் அரசு தற்காலிகமாக நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது. மேலும், இதனால் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சி, 2008ஆம் ஆண்டில் நிகழ்ந்த பொருளாதார நெருக்கடியின் பாதிப்புக்குச் சமமாகும். 80 இலட்சத்துக்கு மேற்பட்டோர் வேலை வாய்ப்புகளை இழந்து விடுவதாகவும், அமெரிக்காவின் பங்குச் சந்தை மதிப்பு சுமார் 45 விழுக்காடு  சரிவடைவதாகவும்  கருதப்படுகிறது.