கடந்த 75 ஆண்டுகளில் திருடப்பட்ட 244 தொல்பொருட்களை மீட்டுள்ள இந்தியா
2023-05-21 16:49:16

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக திருடப்பட்ட தொல்பொருட்களுள் 244 பொருட்களைக் கடந்த 75 ஆண்டுகளில் மீட்டு இந்தியாவுக்குக் கொண்டுவந்துள்ளதாக இந்தியத் தலைமை அமைச்சரின் அலுவலக அமைச்சர் ஜிதேந்திரசிங் சனிக்கிழமை அன்று தெரிவித்தார். 

 இது பற்றி அவர் மேலும் பேசுகையில், தொல்பொருட்களை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வருவது தொடர்பான செயல்முறை விரிவான முறையில் செய்ல்படுத்தப்பட்டு வருவதாகவும், இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோதி, நமது பாரம்பரியத்தை மீட்கவும், புதிய பாரம்பரியத்தை உருவாக்கவும் அதிக முன்னுரிமை அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

 இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கைகளின்படி, இந்திய அதிகாரிகள் இலண்டனில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் ஒன்றிணைந்து தொல்பொருட்களை இந்தியாவிடம் திருப்பித் தர வேண்டுமென்று தொடர்புடைய நிறுவனங்களிடம் கோரி வருகின்றனர்.

 இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னதாக எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களுள் 105.6 காரட் எடையுள்ள உலகின் மிகப்பெரிய வைரமான கோஹினூர் வைரமும் ஒன்றாகும்.

 இந்தியா உரிமை கோரும் இந்த காலனித்துவ கால வைரமானது, இலண்டன் கோபுரத்தில் உள்ள பிரிட்டனின் அரச நகைகள் காட்சிப்படுத்தும் பகுதியில் ‘’வெற்றியின் சின்னமாக’’ காட்சிப்படுத்தப்பட்டு இம்மாத இறுதியில் பொதுமக்களுக்குத் திறக்கப்படவுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.