அணு உலை கழிவு நீர் கடலில் வெளியேற்றம்: ஜப்பானுக்கு 5 கேள்விகள்
2023-05-30 20:34:45

படம்: CFP

சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு ஜப்பானில் மே 29ஆம் நாள் முதல் 5நாள் பயணம் மேற்கொண்டு வருகிறது. ஜப்பானின் செய்தி ஊடகம் வெளியிட்ட தகவலின்படி, இறுதி மதிப்பீட்டு அறிக்கை வெளியாகும் முன்பு, ஃபுகுஷிமா அணு உலை கழிவு நீரை கடலில் வெளியேற்றுவது தொடர்பான பாதுகாப்புப் பிரச்சினை குறித்து இறுதி ஆய்வு மேற்கொள்கிறது. இப்பயணத்தில், 11 நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்கள், ஜப்பான் அரசு மற்றும் டோக்கியோ மின் ஆற்றல் நிறுவனத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்து, கழிவு நீரை வெளியேற்றும் உபகரணங்களை ஆய்வு செய்து, ஜுன் மாதம் மதிப்பீட்டு அறிக்கையை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஃபுகுஷிமா அணு உலையில் இருந்து கழிவு நீரை கடலில் வெளியேற்றும் ஜப்பான் அரசின் முடிவு, உலக அளவில் வன்மையான எதிர்ப்பு மற்றும் ஐயங்களை எழுப்பியுள்ளது. பன்னாட்டுச் சமூகத்தில் இருந்து எழுந்துள்ள கவலைகளை எதிர்கொண்டு, 5 கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் விதமாக ஜப்பான் தெளிவாக விளக்க வேண்டும்.

அதாவது, அணு உலைக் கழிவு நீரைக் கையாள்வதில், கடலில் வெளியேற்றுவது தான் ஒரேயொரு தீர்வு வழிமுறையா? டோக்கியோ மின் ஆற்றல் நிறுவனம் வழங்கிய அணு உலை கழிவு நீர் பற்றிய தரவுகள் நம்பத்தக்கதா? அணு கழிவு நீரைச் சுத்தம் செய்யும் உபகரணங்கள் பயனுள்ளதா?  அணு உலை கழிவு நீரை கடலில் வெளியேற்றினால், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஜப்பான் தற்போது வரை ஓர் அறிவியல்பூர்வமான மதிப்பீட்டை ஏன் வழங்கவில்லை? கழிவு நீரை கடலில் வெளியேற்றுவது குறித்து அண்டை நாடுகள் மற்றும் பசிபிக் தீவு நாடுகளுடன் இணைந்து ஜப்பான் தரப்பு போதுமான கலந்தாய்வை ஏன் நடத்துவில்லை?  ஆகிய 5 கேள்விகளுக்கு ஜப்பான் பதில் அளிக்க வேண்டியது அவசியமானது.

பசிபிக் தீவு நாடுகள் மன்றத்தின் தலைமைச் செயலாளர் ஹென்ரி புனா கூறியதைப் போல, மற்றொரு பெரிய அணு மாசுபாட்டு பேரிடரைத் தடுக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டுகிறோம். இதனிடையில், ஜப்பான் சர்வதேச பொறுப்புகளை ஏற்க வேண்டும். அண்டை நாடுகள் உள்ளிட்ட தொடர்புடைய தரப்புகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து போதுமான கலந்தாய்வு மேற்கொண்டு உடன்பாட்டை எட்ட வேண்டும். இதற்கு முன்பே, கழிவு நீரை கடலில் வெளியேற்றும் திட்டத்தை அங்கீகாரமின்றி செயல்படுத்தக் கூடாது.