உண்மையான மற்றும் அன்பான சீனாவை வெளிப்படுத்தும் மெஸ்ஸியின் பயணம்
2023-06-18 20:38:42

மெஸ்ஸியின் பெய்ஜிங் பயணம் பற்றி, அசோசியேட் பிரஸ், ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு ஊடகங்கள் அதிக செய்திகளை வெளியிட்டன. வெளிநாட்டு சமூக ஊடகங்களில் பரவிய இத்தகைய தகவல்கள் மூலம், உண்மையான மற்றும் அன்பான சீனாவை உலகம் அறிந்து கொள்ளலாம்.

ஆர்ஜென்டீனா-ஆஸ்திரேலியா இடையேயான கால்பந்து போட்டி பெய்ஜிங் தொழிலாளர் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற போது, சீனாவின் கால்பந்து ரசிகர்கள் பலர் ஆர்ஜென்டீனா அணியின் 10 இலக்க சீருடையைப் போன்ற ஆடைகளை அணிந்து, மெஸ்ஸியின் பெயரைத் கூவியழைத்தனர். இப்போட்டியைக் கண்டு மகிழ பலர் வெளியூரிலிருந்து பெய்ஜிங்கிற்கு வந்தனர். இளைஞர்கள் மட்டுமல்லாது சீன முதியோர்கள் பலரும் மெஸ்ஸியை விரும்புகின்றனர்.

சீனாவின் கால்பந்து ரசிகர்ளின் மூலம், விளையாட்டு மீதான சீனர்களின் பேரார்வம், சீனர்களின் திறந்த மனப்பான்மை, உற்சாகம் மற்றும் நட்பார்ந்த குணம், தற்கால சீனாவின் உயிராற்றல் ஆகியவற்றை உணர்ந்து கொள்ளலாம். சீனா பற்றி மேலை நாடுகள் வேண்டுமென்றே உருவாக்கிய தோற்றம் இதனால் ஓரளவு மாற்றமடைந்துள்ளது.

100 முறை கேட்பதை விட ஒரு முறை நேரில் காண்பது நல்லது. சீனாவில் 3 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் கொலம்பிய இளைஞர் ஜோனசனின் பார்வையில், சீனாவின் இணைய வழி பணம் செலுத்தும் முறை, விண்வெளி பயணம், அதிவிரைவு தொடர்வண்டி, உள்கட்டமைப்பு முதலியவை அனைத்தும் புத்துணர்வு வாய்ந்ததாகவும் வியப்பினை அளிக்கக்கூடியதாகவும் உள்ளன. வெளிநாட்டு ஊடகங்கள் வர்ணிக்கும் சீனா நான் நேரில் கண்டு அனுபவிக்கும் சீனாவை விட குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் பின்தங்கிய நிலையில் உள்ளது என்றும் அவர் கூறினார்.

இன்றைய சீனா உயிர்த்துடிப்புடன் உலகத்துடன் நெருக்கமாக இணைந்துள்ளது. அத்தகு உண்மையான சீனாவை அறிய உங்களையும் வரவேற்கிறோம்.