அர்ஜென்டீனா ரென்மின்பியைப் பயன்படுத்தி அந்நிய கடன் திருப்பிச் செலுத்துதல்
2023-07-04 14:21:53

உள்ளூர் நேரப்படி ஜூன் 30ஆம் நாள் வரை காலாவதியான 270 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள அந்நிய கடனை சர்வதேச நாணய நிதியத்திற்கு ரென்மின்பி மூலம் அர்ஜென்டீனா திருப்பிச் செலுத்தியது. ரென்மின்பியைப் பயன்படுத்தி அந்நிய கடனை அர்ஜென்டீனா திருப்பிச் செலுத்துவது இதுவே முதன்முறையாகும்.

ஜூன் 29ஆம் நாள், அர்ஜென்டீன வங்கி முறைமையில் வைப்புத் தொகையாக பயன்படுத்தக் கூடிய நாணயங்களில் ரென்மின்பி சேர்க்கப்பட்டுள்ளது. ரென்மின்பி சேமிப்புக் கணக்குகளைத் திறக்க அந்நாட்டு நிதி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளதாக அந்நாட்டின் மத்திய வங்கி அறிவித்தது. உலகில் பல நாடுகள் போல், ரென்மின்பியின் உலகமயமாக்கத்தில் மாபெரும் ஆர்வத்தை அர்ஜென்டீனா கொண்டுள்ளது என்று அந்நாட்டின் மத்திய வங்கி தலைவர் பெசல் தெரிவித்தார்.

சீனாவுக்கும் அர்ஜென்டீனாவுக்கும் இடையே நாணய ஒத்துழைப்புகளை விரிவாக்குவது, இரு தரப்புகளின் பொருளாதார மற்றும் வர்த்தக உறவின் சீரான வளர்ச்சிக்கான அறிகுறியாகும். 2022ஆம் ஆண்டில், இரு தரப்புகளின் வர்த்தகத் தொகை 2137 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. 2000 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டுவது இதுவே முதன்முறையாகும்.

தவிர, கடந்த சில ஆண்டுகளில், அமெரிக்க டாலர் பற்றாக்குறையை அர்ஜென்டீனா எதிர்கொண்டு வருகிறது. இது, அமெரிக்காவின் மேலாதிக்க நாணய கொள்கையுடன் தொடர்புடையது. அமெரிக்க டாலரை நம்புவதைக் குறைப்பது, அமெரிக்க டாலரின் மேலாதிக்க நிலைமையை உடைக்க, அர்ஜென்டீனா எடுத்த முக்கிய செயலாகும்.