ஜப்பானின் அணு கழிவு நீர் வெளியேற்றத் திட்டத்துக்கு ஐஏஇஏ அறிக்கை அனுமதி அளிக்க முடியுமா?
2023-07-05 19:47:32

ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தின் கழிவு நீரை கடலில் வெளியேற்றும் திட்டம் பற்றி சர்வதேச அணு ஆற்றல் நிறுவனம் மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டது. ஆனால் ஜப்பானின் பொது மக்களிடையில் இவ்வறிக்கை நம்பகத்தன்மை குறைவாக உள்ளது. இதனிடையே, ஜப்பானின் செயல் இவ்வறிக்கை மூலம் நியாயமாக மாற்றப்பட முடியாது என்று தென் கொரியாவின் பல அரசு சாரா அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அம்சங்களைப் பார்த்தால், மதிப்பீட்டுப் பணியில் பங்கெடுத்த நிபுணர்களின் கருத்துகள் இவ்வறிக்கையில் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை. சில ஆய்வு முடிவுகள் நிபுணர்களால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் செயல்திறனைப் பார்த்தால், கடல் சூழலியல் மற்றும் உயிரினங்களுக்கு அணு கழிவு நீரால் ஏற்படும் நீண்டகால பாதிப்பைக் கணிப்பதற்கு அது உகந்த நிறுவனம் அல்ல. ஆனால், ஜப்பானிய அரசு தனது கழிவு நீர் வெளியேற்றத் திட்டம் பற்றி மதிப்பீடு செய்ய இந்நிறுவனத்தை அழைப்பதன் உள்நோக்கம், இந்நிறுவனமும் பொறுப்பேற்கச் செய்வதாகும். இந்த அடிப்படையில் கடந்த 2 ஆண்டுகளாக ஜப்பான் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

முதலில், சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் மதிப்பீட்டுப் பணிக்கு ஜப்பானிய தரப்பு கண்டிப்பான கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இரண்டாவதாக, இந்நிறுவனத்தின் பரிசீலனைக்கான மாதிரிகள் மற்றும் தரவுகள் அனைத்தும் ஜப்பானிய தரப்பினால் வழங்கப்பட்டன. மூன்றாவதாக, சர்வதேச சமூகத்தில் பொது உறவுகளுக்காக ஜப்பான் அதிக முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இவையெல்லாம் ஐயங்களை ஏற்படுத்தியுள்ளன.

ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தின் கழிவு நீரில் 60 வகைகளுக்கும் மேற்பட்ட கதிர்வீச்சுப் பொருட்கள் இருப்பதை பல சர்வதேச ஆய்வுகள் வெளிக்காட்டியுள்ளன. ஆனால், ஜப்பானின் குறிப்பிட்ட சாதனங்கள் பயனுள்ள முறையில் இயங்க முடியுமா? மேலாண்மை நடவடிக்கைகள் பொருத்தமா? கண்காணிப்பு முறைமை சீராக செயல்படுமா? உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில்கள் இன்னும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், ஜப்பானிய அரசு அறிவியலுக்கு மதிப்பளித்து, தனது திட்டத்தை நிறுத்தி, கண்டிப்பான சர்வதேச கண்காணிப்பில் செயல்பட வேண்டும்.