சாலமன் தீவுகள் நாட்டின் தலைமை அமைச்சரின் சீனப் பயணம்
2023-07-15 16:45:19

சீனாவுக்கும் சாலமன் தீவுகள் நாட்டுக்கும் இடையேயான தூதாண்மையுறவு 2019ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பிறகு, அந்நாட்டின் தலைமை அமைச்சர் சோகாவரே 2ஆவது முறையாக சீனாவில் பயணம் மேற்கொண்டார். அவரது நடப்புப் பயணத்தின் போது, இருநாடுகளிடையே ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்து கூட்டாக வளரும் பன்முக நெடுநோக்கு கூட்டுறவு அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்டுள்ளதோடு, சீனாவுக்கான சாலமன் தீவுகள் நாட்டின் தூதரகமும் திறக்கப்பட்டுள்ளது.

சீனாவுடன் தூதாண்மை உறவை உருவாக்குவதென்பது சாலமன் தரப்பு மேற்கொண்ட சரியான தேர்வாகும். பசிபிக் தீவு நாடுகளின் தேவைகளுக்குச் சீனா முக்கியத்துவம் அளிக்கிறது. இதர பெரிய நாடுகளிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டதாகும் என்று சோகாவரே கூறினார்.

வளர்ச்சி பிரச்சினை சோகாவரேயின் கவனத்தை ஈர்க்கும் முக்கிய அம்சமாகும். பெய்ஜிங்கில் நடைபெற்ற கூட்டு வளர்ச்சிக்கான உலக நடவடிக்கை மன்றத்தின் உயர் நிலை கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் கூறுகையில், வறுமை ஒழிப்புக்காக, தரமிக்க உள்கட்டமைப்பு மூலம் பொருளாதாரத் திறனை வலுப்படுத்த வேண்டும். உள்கட்டமைப்பு துறையில், சீனா, சாலமனின் மிகப் பெரிய ஒத்துழைப்பு கூட்டாளியாகும் என்று குறிப்பிட்டார்.

கடந்த சுமார் 4 ஆண்டுகளில் வேகமாக வளர்ந்து வரும் இருதரப்புறவிலிருந்து சாலமன் தீவுகள் நாடு பயனடைந்துள்ளது. இதனிடையே, சீனாவின் வறுமை ஒழிப்பு அனுபவங்கள், பொருளாதாரத்தின் உயிராற்றல், வளரும் நாடுகளின் கூட்டு வளர்ச்சிக்கான முயற்சிகள் ஆகியவையும் சாலமன் தீவுகள் நாட்டுக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளன.

சோகாவரேயின் சீனப் பயணத்தின் போது, வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு, வர்த்தகம், பயணியர் விமானப் போக்குவரத்து, சுங்கத்துறை, வானிலை உள்ளிட்டவை தொடர்பான இருதரப்பு ஆவணங்களில் இருநாடுகளும் கையொப்பமிட்டு, நடைமுறை ஒத்துழைப்புகளை ஆழமாக்கியுள்ளன.