சீனாவின் மீது பழி தூற்றிய ஜப்பானின் தற்காப்பு வெள்ளையறிக்கை
2023-08-01 19:09:12

2023ஆம் ஆண்டு தற்காப்பு வெள்ளையறிக்கையை ஜப்பான் அரசு அண்மையில் ஏற்றுக்கொண்டது. இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு மிகக் கடுமையான மற்றும் சிக்கலான பாதுகாப்பு நிலைமையில் ஜப்பான் உள்ளது. அத்துடன், முன்னென்றும் கண்டிராத பெரிய நெடுநோக்கு அறைக்கூவலாக சீனா திகழ்கிறது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “சீன அச்சுறுத்தல் கோட்பாடு” பற்றி இந்தப் புதிய வெள்ளையறிக்கையில் மேலும் கடுமையான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று ஜப்பான் செய்தி ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

1970ஆம் ஆண்டு வெளியிடப்படத் தொடங்கிய தற்காப்பு வெள்ளையறிக்கையானது, ஜப்பானின் உள்நாட்டுப் பாதுகாப்புச் சூழல் மற்றும் தற்காப்புக் கொள்கைகளை எடுத்துக்கூறுகின்ற அதிகாரப்பூர்வ ஆவணமாகும்.

இவ்வாண்டின் தற்காப்பு வெள்ளையறிக்கையில், “ஜப்பான்-அமெரிக்க கூட்டணி”உள்ளிட்ட தொடர்புடைய சொற்கள் அதிகமாக காணப்பட்டுள்ளன. தரவுகளின்படி, கடந்த 10 ஆண்டுகளில், இவ்விரு நாடுகளுக்கிடையிலான இராணுவப் பயிற்சிகளின் எண்ணிக்கை 24 இலிருந்து 108ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் கிழக்காசிய பாதுகாப்புக் கொள்கைக்கு முழுமையாகச் சேவை புரியும் இத்தற்காப்பு வெள்ளையறிக்கை, சீனப் படையின் இயல்பான வளர்ச்சி மற்றும் நடவடிக்கையின் மீது பழி தூற்றியதோடு, தைவான் பிரச்சினையில் சீனாவின் உள் விவகாரத்தில் மோசமாகத் தலையிட்டுள்ளது.

ஜப்பானின் இத்தகைய ஆபத்தான செயல்கள், சர்வதேச சமூகத்தில் கவலை மற்றும் விழிப்பை ஏற்படுத்தியுள்ளன. இரண்டாவது உலகப் போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கையும், அமைதியான அரசியல் அமைப்புச் சட்டத்தையும் பேணிக்காப்பது தான், ஜப்பானின் நீண்டகால வளர்ச்சிக்கான அடிப்படையாகும் என்று ஜப்பானிய பேராசிரியர் ஒருவர் தெரிவித்தார்.