ஆயுத நடவடிக்கையைத் தூண்டிவிடும் ஜப்பானிய அரசியல்வாதியின் உள்நோக்கம் என்ன?
2023-08-12 16:05:00

ஜப்பானின் லிபரல் ஜனநாயகக் கட்சியின் துணைத் தலைவரும், அந்நாட்டின் முன்னாள் தலைமை அமைச்சருமான தாரோ அசோ அண்மையில் சீனாவின் தைவானில் பயணம் மேற்கொண்டது, பல்வேறு துறையினரிடையே கடும் விமர்சனத்துக்குள்ளானது. முன்பு தைவானில் ஜப்பானின் காலனியாதிக்கச் செயலுக்கு தாரோ அசோ மன்னிப்பு கேட்காமல், தைவானை ஆயுத ஆற்றலை வளர்த்து போருக்கு தயார் செய்யத் தூண்டியுள்ளார். இது, தைவான் மக்களை நெருப்புக் குழியில் தள்ளும் செயல் என்று தைவான் ஊடகங்கள் விமர்சித்தன.

ஜப்பானின் அரசியல் வட்டாரத்தில், தைவான் சுதந்திரத்துக்கு ஆதரவான தரப்பின் பிரதிநிதியான தாரோ அசோ, சரியற்ற கருத்துகளை பலமுறை தெரிவித்திருந்தார். ஜப்பானின் இராணுவ வெறி நீங்காமல் மீண்டும் எழுந்திருக்கும் ஆபத்தான போக்கை அவரது நடப்பு தைவான் பயணம் மற்றும் கூற்றுகள் வெளிப்படுத்தியுள்ளன.

19ஆவது நூற்றாண்டின் நடுப்பகுதியில், கிழக்காசியாவை வென்று உலகத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்காக, ஜப்பான், தைவானைக் கைப்பற்றியதை முதல் இலக்காக கொண்டு, இராணுவ விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. தற்போது, ஜப்பான் தனது அமைதியான அரசியல் அமைப்புச் சட்டத்தைத் தவிர்த்து, இராணுவ வல்லரசை மீட்டு, அமெரிக்காவுடனான கூட்டணியை வலுப்படுத்துவதற்கான முக்கிய வழிமுறையாக தைவான் பிரச்சினையில் தலையிடுவது மாறியுள்ளது.

ஆனால் தற்போதைய சீனா, 19ஆவது நூற்றாண்டில் இருந்த சிங் வம்ச அரசு அல்ல. ஜப்பானின் குறிப்பிட்ட சில அரசியல்வாதிகள் 100க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பை போல் செயல்பட்டு, காலனி ஆட்சியாளராக சீனாவின் உள்விவகாரங்களில் தலையிட்டால், தனக்கு தானே தீங்குவிளைவிப்பர். நாட்டின் முழுமையான ஒருமைப்பாட்டை சீனா நனவாக்குவது தடுக்கப்பட முடியாத வரலாற்றுப் போக்காகும்.