ஐரோப்பிய ஒன்றிய பொருளியலாளர்: ரஷியா மீதான தடையின் பாதிப்பு
2023-08-18 11:09:30

ஐரோப்பிய ஒன்றியத்தின் புள்ளிவிவரப் பணியகம் ஆகஸ்ட் 17ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில், ஐரோப்பிய ஒன்றியத்தில் திவால் நடைமுறைக்கு விண்ணப்பித்துள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து 6ஆவது காலாண்டு காலமாக அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை முந்தைய காலாண்டில் இருந்ததைக் காட்டிலும், 8.4 விழுக்காடு அதிகரித்து, 2015ஆம் ஆண்டு தரவுகள் சேகரிக்கப்பட்ட பிறகு, மிக உயர்வான நிலையை எட்டியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் காணப்பட்டுள்ள பண வீக்கம், எரியாற்றல் செலவு மற்றும் போக்குவரத்துச் செலவு உயர்வு முதலிய காரணிகளால், பல தொழில் நிறுவனங்களால் இயல்பாக இயங்க முடியவில்லை. கடந்த ஆண்டுக்குப் பிறகு, மக்கள் தங்களின் தேவைகளைக் குறைத்துக் கொண்டுள்ளதால், ஜெர்மனி, பிரான்ஸ் முதலிய நாடுகளில் பல உணவு மற்றும் ஆடை தொழில் நிறுவனங்கள் திவால் நடைமுறைக்கு விண்ணப்பித்துள்ளன. ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய ஒன்றியப் பொருளாதாரத்தை வழிநடத்தும் நாடுகள் நெருக்கடியை எதிர்நோக்குகின்றன. இந்நிலையில், ரஷியா மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையால் ஏற்படும் பின்விளைவு, பொருளாதாரத்தில் “பனிசரிவைக்” கொண்டு வரக் கூடும் என்று ஐரோப்பிய ஒன்றிய பொருளியலாளர் ரூடி அனூட் தெரிவித்தார்.