பல நாடுகள் பிரிக்ஸில் இணைய விரும்புவது ஏன்?
2023-08-20 17:18:15

படம்:CFP

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு (15ஆவது ஆண்டுக் கூட்டம்) தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்கில் வரும் 22 முதல் 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முன்னதாக, 14ஆவது ஆண்டுக் கூட்டத்தில் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பிரிக்ஸ் நாடுகள் ஒப்புக்கொண்டன. எனவே, பிரிக்ஸ் அமைப்பின் விரிவாக்கம் இந்த மாநாட்டின் மையக்கருத்துகளில் ஒன்றாக இருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிரிக்ஸில் இணைவதற்கு 40-க்கும் மேற்பட்ட நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தென் ஆப்பிரிக்கா தெரிவித்துள்ளது. இவற்றில், சௌதி அரேபியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், ஆர்ஜெண்டினா, இந்தோனேசியா, எகிப்து, எத்தியோப்பியா உள்ளிட்ட 20 நாடுகள் பிரிக்ஸில் இணைவதற்கான அதிகாரப்பூர்வ விண்ணப்பங்களைத் தாக்கல் செய்துள்ளன.

வளர்ந்து வரும் நாடுகளின் ஒத்துழைப்புக்கு முக்கிய மேடையாக இருந்து வரும் பிரிக்ஸ், பலதரப்புவாதத்தைக் கடைப்பிடிக்கிறது; சர்வதேச நிர்வாக முறைமையில் சீர்திருத்தம் கோருகிறது; வளர்ந்து வரும் நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்துதிறது. மேலும், சர்வதேச விவகாரங்களில் நேர்மறையான, நிலையான மற்றும் கட்டுக்கோப்பான ஆற்றலை வெளிக்காட்டி வரும் பிரிக்ஸ் அமைப்புக்கு சர்வதேச சமூகத்தில் பரந்த அங்கீகாரமும் ஆதரவும் கிடைத்துள்ளன.

தவிரவும், உலக மக்கள் தொகையில் 40 விழுக்காடு மற்றும் உலகப் பொருளாதாரத்தில் 26 விழுக்காட்டை பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் கொண்டிருப்பது அதன் மீதான கவனத்தை அதிகப்படுத்தியுள்ளதற்குக் காரணமாகும்.

தங்களின் பொருளாதார அளவிற்கு ஏற்ப ஒரு சர்வதேச ஆற்றல் அமைப்பை நிறுவவும், தற்போதைய உலகளாவிய நிர்வாக அமைப்பில் உள்ள ஏற்றத்தாழ்வை சரிசெய்யவும் பிரிக்ஸ் முயற்சிப்பதே அதில் பல நாடுகள் இணைவதற்குக் காரணம் என்று சீன சர்வதேச ஆய்வுகள் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் வங் யோ மிங் சிஜிடிஎன் ஊடகத்திடம் தெரிவித்தார்.

பரஸ்பரம் மதிப்பளித்தல் மற்றும் புரிந்துகொளல், சமத்துவம், ஒற்றுமை, திறப்பு, உள்ளடக்கிய தன்மை, கருத்தொற்றுமை ஆகியவற்றில் பிரிக்ஸ் அமைப்பு, ஜி7 அமைப்பிடமிருந்து முற்றிலும் வேறுபடுகிறது. இதுவும், பிரிக்ஸ் முறைமையில் பிற நாடுகள் இணைய விரும்புவதற்கான காரணங்களாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

பனிப்போர் சிந்தனைக்கு பதிலடி தரும் விதம் பலதரப்புவாதத்தையும் பலதுருவமயமாக்கத்தையும் பிரிக்ஸ் அமைப்பு உயர்த்திப் பிடிக்கிறது என்று கியூபா நாட்டு அரசுத் தலைவர் மிகுல் டியஸ்-கேனல் தெரிவித்தார்.

பல தசாப்தங்களாக உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்காவின் ஆதிக்கம் நீடிப்பதால் பல நாடுகள் சோர்வடைந்து விட்டன. ஆனால், எவ்வித முன் நிபந்தனைகளையும் விதிக்காமல் நாடுகளின் முதலீடு மற்றும் வரத்தகத்துக்கு பிரிக்ஸ் அமைப்பு ஆதரவு அளித்து வருகிறது என்று ரிபெலியன் என்ற ஸ்பேனிஷ் இணைய ஊடகம் தெரிவித்துள்ளது.