மத்திய கிழக்கு நாடுகளின் உறவில் அமெரிக்காவின் தலையீட்டுக்கு ஈரான் கண்டனம்
2023-08-22 11:33:53

அமெரிக்க மற்றும் ஈரான் உறவு, பிராந்திய நிலைமை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து, ஈரான் வெளியுறவு அமைச்சகம் ஆகஸ்ட் 21ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் நாசர் கனனி கூறுகையில், மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையேயான உறவு மேம்படுவதைப் பார்க்க விரும்பாத அமெரிக்கா, மேம்பாட்டைச் சீர்குலைக்க முயல்கின்றது என்றார்.

அடுத்த சில நாட்களில், செளதி அரேபியாவுக்கான ஈரான் தூதர் தனது பதவி ஏற்க செளதி அரேபியாவுக்குச் செல்லவுள்ளார். அண்மையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் செளதி அரேபியாவில் பயணம் மேற்கொண்டபோது, அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட பல துறைகளிலான ஒத்துழைப்புகள் குறித்து இரு தரப்புகள் கலந்தாய்வு நடத்தின. தற்போது இப்பிராந்தியத்தில் நேர்மறையான ஒத்துழைப்பு சூழல் உருவாகியுள்ளது. ஆனால், அமெரிக்கா இப்பிராந்தியத்தில் விடா தொந்தரவு செய்து வருகின்றது.

வளைகுடா நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு அமெரிக்காவுக்கு கவலை ஏற்படுத்தியுள்ளதற்குச் சான்றுகள் உள்ளன. அமெரிக்க அரசு இப்பிராந்தியத்தில் தனது இராணுவ சக்தியை அதிகரிக்கும் செயல்களை பிராந்திய நாடுகள் நேரடியாக பார்த்துள்ளது. இது, ஆத்திரமூட்டும் செயல் ஆகும் என்று கனனி தெரிவித்தார்.