ஃபுகுஷிமா அணு உலைக் கழிவு நீரைக் கடலில் வெளியேற்றுவதற்குச் சர்வதேசச் சமூகம் கண்டனம்
2023-08-23 10:28:02

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கடுமையான எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், ஆகஸ்டு 24ஆம் நாள் ஃபுகுஷிமா அணு உலைக் கழிவு நீர் கடலில் வெளியேற்றப்படும் என்று ஜப்பான் அரசு 22ஆம் நாள் அறிவித்தது. ஜப்பான் மக்கள், சர்வதேச அமைப்பு, பசிபிக் பெருங் கடலுக்கு அருகிலான நாடுகள் ஆகியோர் ஜப்பானின் இச்செயலை அடுத்தடுத்து கண்டித்தனர். ஜப்பானின் இச்செயல் சர்வதேசச் சட்டத்தை மீறுவது மட்டுமல்லாமல், மீட்க முடியாத பேரழிவுகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது என்று பொதுவாக கருத்து தெரிவித்தது.

ஜப்பான் அரசு தங்களுக்கு அளித்த வாக்குறுதியை மீறியுள்ளதாக ஜப்பான் மீனவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

சமீபத்திய பல ஆய்வுகளின் படி, ஃபுகுஷிமா அணு உலைக் கழிவு நீரில் அதிக அளவு கதிரியக்கக் கூறுகள் உள்ளன. இந்த பொருட்கள் பசிபிக் பெருங்கடலில் ஏன் உலகளாவிய கடற்பரப்பில் கூட பரவக்கூடும். இது கடல் சூழல் மற்றும் மனித ஆரோக்கியத்துக்கு அளவிட முடியாத பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராந்தியத்தில் உள்ள மக்களின் மனித உரிமையை மீறும் நடவடிக்கைகளை ஜப்பான் அரசு நிறுத்த வேண்டும் என்று பசுமை அமைதி அமைப்பின் நிபுணர் சீன் பெர்னி தெரிவித்தார்.

ஃபுகுஷிமா அணு உலைக் கழிவு நீரை கடலில் ஜப்பான் வெளியேற்றுவதைத் தடுக்க சர்வதேசக் கடல் சட்ட நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்யுமாறு தென் கொரியாவில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சமீபத்தில் அந்நாட்டு அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடல் சட்டம் பற்றிய ஐ.நா. பொது ஒப்பந்தத்தின் படி, பல்வேறு நாடுகளுக்குக் கடல் சூழலைப் பாதுகாக்கும் கடமை உள்ளது. மேலும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட நாடான ஜப்பான் சர்வதேசச் சட்டத்தின் படி பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.