பிரிக்ஸ் அமைப்பின் உயர்நிலை ஒத்துழைப்பும் உலகளாவிய வளர்ச்சியும்
2023-08-24 15:26:15

சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட தரவுகளின் படி 2022 ஆம் ஆண்டில் பிரிக்ஸ் நாடுகளின் மொத்த வர்த்தகத்தின் அளவு 9.2 டிரில்லியன் அமெரிக்க டாலராகும். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 7.8 சதவீதம் அதிகரித்துள்ளது. இவற்றில், பிரிக்ஸ் அமைப்பின் முக்கிய நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளுக்கு இடையிலான மொத்த வர்த்தகத்தின் மதிப்பு 1.14 டிரில்லியன் அமெரிக்க டாலராகும். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 13.3 விழுக்காடு அதிகரித்துள்ளது.

தற்போதைய சர்வதேசப் பொருளாதார மீட்சியானது பெரும் சவால்களை எதிர்கொண்டு வரும் பின்னணியில், பிரிக்ஸ் நாடுகள் ஆழமான ஒத்துழைப்பை மேற்கொண்டு பொருளாதார வளர்ச்சியை நிலைப்படுத்துவதோடு  அதன் வளர்ச்சியை முடுக்கிவிட்டு உலகச் சந்தையின் நிலைத்தன்மைக்குரிய உந்து ஆற்றலை அளித்து வருகின்றன.

இதனிடையில், தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகரில் புதன்கிழமை நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் 15 ஆவது உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங், ‘வளர்ச்சி என்பது அனைத்து நாடுகளுக்கும் உரிய தவிர்க்க முடியாத உரிமையாகும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நிறுவனங்களின் மதிப்பீட்டின்படி, நிகழாண்டு உலகப் பொருளாதார மீட்சியானது மூன்று விழுக்காட்டுக்கும் குறைவான வளர்ச்சியோடு தள்ளாடிக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில், பிரிக்ஸ் நாடுகள் ‘பிரிக்ஸ் பிளஸ்’ என்பதன் வழி வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் நாடுகளுடன் நெருக்கமான ஒத்துழைப்புகளை மேற்கொண்டு வருகின்றன. இம்முயற்சியானது பிரிக்ஸ் அமைப்பில் உள்ள ஐந்து நாடுகளுக்கு அப்பாற்பட்டு உலகளாவிய வளர்ச்சிக்குரிய வாய்ப்பை அளித்துள்ளது.

ஒட்டுமொத்த அளவில் பார்க்கும் போது பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார உற்பத்தியானது உலகின் மொத்த உற்பத்தியில் 25 சதவீதமாகவும், மொத்த வர்த்தக அளவு உலக மொத்த வர்த்தகத்தில் 18 சதவீதமாகவும் இருந்து வருகின்றன. இதன் காரணமாக பிரிக்ஸ் நாடுகளானவை உலகளவில் புறக்கணிக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.

சீனாவைப் பொருத்தமட்டில் பிரிக்ஸ் நாடுகளுடனான அதன் ஒத்துழைப்பு சிறப்பான நிலையை எட்டியுள்ளது. சீனச் சுங்கத்துறை நிர்வாகம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, நடப்பாண்டின் முதல் ஏழு மாதங்களில், பிற பிரிக்ஸ் நாடுகளுக்கான சீனாவின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் மொத்தம் 2.38 டிரில்லியன் யுவான் ஆகும். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இது19.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆளவானது சீனாவின் மொத்த இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில் 10.1 சதவீதம் ஆகும்.

2023 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களின் சீனாவுக்கும் பிற பிரிக்ஸ் நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தில் வாகன உதிரிபாகங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், விவசாய இயந்திரங்கள், எரிசக்தி மற்றும் விவசாயப் பொருட்கள் போன்ற துறைகள் சார்ந்த ஒத்துழைப்புகள் பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளன.

இதனிடையில் சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங், நடைமுறை ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளதோடு, டிஜிட்டல் பொருளாதாரம், பசுமை மேம்பாடு மற்றும் விநியோகச் சங்கிலி போன்ற துறைகளில் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் நிதி பரிமாற்றங்களை மேம்படுத்த அழைப்பு விடுத்துள்ளார்.

ஷிச்சின்பிங்கின் கூற்றுப்படி, பிரிக்ஸ் நாடுகள், புதுமையாக்கம்‌ தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்து பயன்பெறும் வகையில் சீனா, சீன – பிரிக்ஸ் அறிவியல் மற்றும் புத்தாக்க வளர்ச்சிக்கான பூங்காவை நிறுவும்.

அதோடு, ஐக்கிய நாடுகள் அவையின் நிலையான வளர்ச்சிக்கான ஐ.நா. 2030 நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவதில் தொழில்துறை ஒருங்கிணைப்பு மற்றும் திட்ட ஒத்துழைப்புக்கான தளமாக நிலையான வளர்ச்சிக்கான தொழில்துறை ஒத்துழைப்புக்கான பிரிக்ஸ் கட்டமைப்பை கூட்டாக உருவாக்க சீனா அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயல்படும்.

உலகளாவிய நிர்வாக அமைப்பின் சீர்திருத்தத்தை ஊக்குவிப்பதும் வழிநடத்துவதும் பிரிக்ஸ் ஒத்துழைப்பின் முக்கியப் பகுதியாகும்.

நடப்பு உச்சிமாநாட்டில் ஷிச்சின்பிங் கூறியது போல், சர்வதேச சமூகம் வளர்ச்சி வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்ளவும், உலகளாவிய சவால்களைச் சமாளிக்கவும் விரும்பினால், உலகளாவிய நிர்வாகத்தை வலுப்படுத்துவதே சரியான தேர்வாகும்.

அதோடு, தற்போதைய சர்வதேச நெருக்கடிகளான உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடி, காலநிலை மாற்றம், பயங்கரவாதம், புவிசார் அரசியல் மோதல்கள், மேலாதிக்கம் மற்றும் பாதுகாப்புவாதம் போன்ற உலகளாவிய சவால்களை கூட்டாக எதிர்கொள்ள வேண்டுமாயின் அதற்கு உண்மையான பன்முகத்தன்மையை கடைப்பிடிக்ங வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் வலியுறுத்தியுள்ளார்.

பிரிக்ஸ் ஒத்துழைப்பின் கீழ் நிறுவப்பட்ட முதல் பலதரப்பு நிதி நிறுவனமான, புதிய வளர்ச்சி வங்கி இதுவரை 33 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான 99 கடன் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில் பிரிக்ஸின் புதிய வளர்ச்சி வங்கி குறித்துப் பேசிய ஷிச்சின்பிங்,  வங்கியின் பங்கை முழுமையாகப் பயன்படுத்தவும், சர்வதேச நிதி மற்றும் நாணய அமைப்புகளில் சீர்திருத்தத்தை முன்னோக்கிச் செலுத்தவும்  வளரும் நாடுகளின் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்தவும் அவற்றின் குரலை அதிகரிக்கவும் அழைப்பு விடுத்தார்.

பிரிக்ஸ் நாடுகள் மனிதகுலத்தின் எதிர்கால வளர்ச்சிக்கான பொதுவான கண்ணோட்டத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன. இக்கொள்கை அதிகமான நாடுகளை ஈர்த்துள்ளதோடு, அவை பிரிக்ஸ் அமைப்பில் இணையவும் ஆர்வம் காட்டி வருகின்றன.

இப்போக்கு குறித்து கருத்து தெரிவித்த ஷிச்சின்பிங், "பிரிக்ஸ் ஒத்துழைப்பைப் பற்றி வளரும் நாடுகளின் உற்சாகம் அதிகரித்து வருவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் அவர்களில் பலர் பிரிக்ஸ் ஒத்துழைப்பு அமைப்பில் சேர விண்ணப்பித்துள்ளனர்," என்பதைச் சுட்டிக் காட்டி, பல நாடுகளையும் பிரிக்ஸ் குடும்பத்திற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை வலியுறுத்தினார். இம்முயற்சியானது உலகளாவிய நிர்வாகத்தை மேலும் நியாயமானதாகவும், சமத்துவமாகவும் மாற்றுவதற்கான வலிமையை அளிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.