ஷிச்சின்பிங்: பிரிக்ஸ் விரிவாக்கம் உலக அமைதி மற்றும் வளர்ச்சியின் சக்தியை மேலும் பலப்படுத்தும்
2023-08-25 14:11:28

பிரிக்ஸ் அமைப்பின் 15ஆவது உச்சி மாநாடு ஆகஸ்ட் 24ம் நாள் தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரில் சிறப்புச் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. இக்கூட்டத்தில் பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினர்களாக இணைய சௌதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், அர்ஜென்டீனா, ஈரான், எத்தியோப்பியா ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த விரிவாக்கம் இந்த உச்சிமாநாட்டின் மிக முக்கியமான சாதனைகளில் ஒன்றாகும். இது பற்றி சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் கூறுகையில், பிரிக்ஸ் நாடுகளின் இந்த விரிவாக்கம், வரலாறு முக்கியத்துவம் வாய்ந்தது. வளரும் நாடுகளுடனான ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை மேற்கொள்வது பிரிக்ஸ் நாடுகளின் உறுதியை பிரதிபலிப்பதோடு சர்வதேசச் சமூகத்தின் எதிர்பார்ப்புக்குப் பொருந்தியதாகவும் உள்ளது. மேலும், புதிதாக வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் நாடுகளின் கூட்டு நலன்களுக்கும் பொருந்தியது எனக் குறிப்பிட்டார். உறுப்பு நாடுகளின் விரிவாக்கத்தைக் கொண்ட புதிய தொடக்கப் புள்ளியாக, பிரிக்ஸ் ஒத்துழைப்பு அமைப்பு முறைக்குப் புதிய உயிராற்றலைக் கொண்டு வந்து, உலக அமைதி மற்றும் வளர்ச்சியின் சக்தியை மேலும் பலப்படுத்தும் என்றார் அவர்.