9ஆவது குபுச்சி சர்வதேச பாலைவன மன்றக் கூட்டம் துவக்கம்
2023-08-26 19:44:53

9ஆவது குபுச்சி சர்வதேச பாலைவன மன்றக் கூட்டம் ஆகஸ்ட் 26ஆம் நாள் சீனாவின் உள் மங்கோலியாவிலுள்ள ஓர்தோஸ் நகரில் துவங்கியது. மனிதகுலத்தின் நலனுக்காக தொழில் நுட்பத்தின் உதவியுடன் பாலைவனக் கட்டுப்பாடு என்பது நடப்பு கூட்டத்தின் தலைப்பாகும். உலகளவில் 20க்கும் அதிகமான நாடுகளின் அரசியல் மற்றும் வணிகத் துறையினர்கள், நிபுணர்கள், அறிஞர்கள் என 300க்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.

2 நாட்கள் தொடரும் இக்கூட்டத்தின்போது, பாலைவனத்தில் பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் மூலவளங்களின் தொடரவல்ல பயன்பாடு, மணல் காற்று தடுப்பு மற்றும் அறிவியல் ரீதியிலான பாலைவனக் கட்டுப்பாடு, அறிவு மற்றும் தொழில் நுட்பங்களின் மூலம் நிலப்பரப்பு மீட்சியை முன்னேற்றுவது உள்ளிட்ட கருப்பொருட்களில் துணைக் கருத்தரங்குகள் நடைபெற உள்ளன.

துவக்க விழாவில், வறட்சி, பாலைவனமயமாதல் மற்றும் நில சீரழிவுக்கான சீன-அரபு சர்வதேச ஆய்வு மையம் திறந்து வைக்கப்பட்டதோடு, முதல் தொகுதி ஒத்துழைப்புத் திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளன.

2007ஆம் ஆண்டு நிறுவப்பட்ட குபுச்சி சர்வதேச பாலைவன மன்றத்தின் கீழ், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூட்டம் நடைபெற்று வருகிறது. உலகளவில் பாலைவன மயமாதல் தடுப்பு மற்றும் பசுமை பொருளாதார வளர்ச்சியின் முன்னேற்றத்தை இலக்காகக் கொண்ட ஒரேயொரு பெரிய சர்வதேச மன்றம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.