ஹாங்காங்கின் நியாயமான சட்ட அமலாக்கத்தில் தலையிடக் கூடாது:சீனா
2023-08-27 16:36:21

தேசிய பாதுகாப்பைப் பேணிக்காப்பதற்காக அவசிய நடவடிக்கையை ஹாங்காங் காவற்துறை சட்டப்படி மேற்கொண்டது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் ஆதாரமின்றி விமர்சித்து, ஹாங்காங் விவகாரத்திலும் சீனாவின் உள்விவகாரத்திலும் தலையீடு செய்தது. இதற்கு ஹாங்காங்கிலுள்ள சீன வெளியுறவு அமைச்சகத்தின் அலுவலக செய்தித் தொடர்பாளர் ஆகஸ்ட் 27ஆம் நாள் கடும் கண்டனம் மற்றும் உறுதியான எதிர்ப்பு தெரிவித்தார்.

ஹாங்காங்கில் சீனத் தேசிய பாதுகாப்பைப் பேணிக்காப்பதற்கான சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு ஹாங்காங் மக்கள் சட்டப்படி அனுபவிக்கும் பல்வேறு உரிமைகள் மற்றும் சுதந்திரம் மேலும் பாதுகாப்பான சூழ்நிலையில் முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் தேசிய பாதுகாப்பானது, எந்த உரிமையினாலும் மீறப்பட முடியாத அடிப்படை. தேசிய பாதுகாப்பைப் பாதிக்கும் செயலைக் கண்டிப்பான முறையில் வேரோடு அழிப்பது பல்வேறு நாடுகளின் வழக்கமாகும். சீனாவை எதிர்த்து ஹாங்காங்கில் குழப்பத்தை ஏற்படுத்திய நபர்கள் மீது ஹாங்காங் காவற்துறை சட்ட அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டது, நியாயமானதாகவும், விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதாகவும் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

மேலும், தேசிய பாதுகாப்புக்காக அதிக சட்டங்களை வகுத்துள்ள அமெரிக்கா, இரட்டை வரையறையைக் கைவிட்டு, வெட்கக் கேடான அரசியல் நடிப்பையும், சீன விவகாரங்களில் தலையீடு செய்வதையும் உடனே நிறுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.