சீனாவில் இணையப் பயனர் எண்ணிக்கை 107.9 கோடி
2023-08-28 17:29:59

சீனாவின் இணையத் துறை வளர்ச்சி பற்றிய 52ஆவது புள்ளிவிவர அறிக்கையை சீன இணைய வமையமைப்பு தகவல் மையம் ஆகஸ்ட் 28ஆம் நாள் வெளியிட்டது. இதன்படி, 2023ஆம் ஆண்டு ஜுன் மாதம் வரை சீனாவில் இணையப் பயனர் எண்ணிக்கை 107.9 கோடியாக உயர்ந்ததோடு, இணையப் பரவல் விகிதம் 76.4 விழுக்காட்டை எட்டியுள்ளது.

அடிப்படை இணைய வளங்களைப் பார்த்தால், ஜுன் மாதம் வரை, சீனாவின் களப்பெயர்கள் எண்ணிக்கை 3 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரமாகும். செல்லிடபேசி நிலையங்களின் எண்ணிக்கை 1 கோடியே 12 லட்சத்து 90 ஆயிரமாகும். இவற்றில் பயன்பாட்டுக்கு வந்துள்ள 5ஜி நிலையங்களின் எண்ணிக்கை 29.37 லட்சமாகும். இதனிடையே, செல்லிட இணைய செயலிகள் விறுவிறுப்பாக வளர்ந்து வருகின்றன. உள்நாட்டுச் சந்தை கண்காணிப்பின்படி, சுமார் 26 லட்சம் செயலிகள், இணையப் பயனர்களின் அன்றாட கற்றல், வாழ்க்கை மற்றும் பணிக்கு அதிகமாகப் பயன்படுகின்றன.

மேலும், இவ்வாண்டின் முற்பாதியில் சீனச் சந்தையின் தேவை மீண்டு வரும் நிலையில், எண்ணியல் பொருளாதாரமானது வளர்ச்சியை நிதானப்படுத்துவதற்கான முக்கிய விசைப்பொறியாக, பொருளாதார மீட்சியைப் பெரிதும் ஊக்குவித்துள்ளது. தவிரவும், இக்காலக்கட்டத்தில் சீனாவின் இணைய வழி சில்லறை விற்பனை 7.16 லட்சம் கோடி யுவானை எட்டி, முன்பை விட 13.1 விழுக்காடு அதிகரித்தது. இதில் கிராமப்புற இணைய வழி சில்லறை விற்பனை 1.12 லட்சம் கோடி யுவானை எட்டி, 12.5 விழுக்காடு அதிகரிப்பைக் கண்டுள்ளது. எண்ணியல் பொருளாதாரத்தில் முக்கிய வடிவமான இணைய வழி கொள்வனவு, நுகர்வு வளர்ச்சியை மேம்படுத்துவதில் தொடர்ந்து ஆக்கப்பூர்வ பங்காற்றி வருகிறது என்று இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.