ரஷிய மற்றும் துருக்கி அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை
2023-09-05 11:02:10

ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் மற்றும் துருக்கி அரசுத் தலைவர் எர்டோகன் ஆகியோர் 4ஆம் நாள் திங்கள்கிழமையன்று ரஷியாவின் சோச்சி நகரில் பேச்சுவார்த்தை நடத்தினர். இரு நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம், அரசியல் மற்றும் மானிடவியல் துறைகளிலான ஒத்துழைப்புகள் குறித்தும், கருங்கடல் துறைமுக வேளாண் பொருட்கள் போக்குவரத்து ஒப்பந்தம் உள்ளிட்ட சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்தும் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

பேச்சுவார்த்தைக்குப் பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் புதின் கூறுகையில், இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகத் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. தங்களது நாட்டின் நாணயங்களைப் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை செய்யும் போக்கு மேலும் தெளிவாகி வருகிறது. மேலும், எரியாற்றல் விநியோகத்தில் நம்பகமான நாடாக திகழும் ரஷியா, தொடர்ந்து துருக்கிக்கு பயன் மிகுந்த தூய்மையான எரியாற்றல் வழங்கி வருகின்றது என்று தெரிவித்தார்.

உக்ரைன் பிரச்சினை குறித்து புதின் கூறுகையில், கருங்கடல் துறைமுக வேளாண் பொருட்கள் போக்குவரத்தின் ஒப்பந்தத்தில் ரஷிய வேளாண் உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதி மீதான தடை ரத்து செய்யப்படுவது முற்றிலும் அமலுக்கு வந்தால், உடனடியாக இவ்வொப்பந்த்தை மீண்டும் நடைமுறைக்கு வரும் சாத்தியத்தை ரஷியா கருத்தில் கொள்ளும் என்று குறிப்பிட்டார்.

எர்டோகன் கூறுகையில், இவ்வொப்பந்தம் மீண்டும் செயல்படுத்துவது பற்றிய கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்த துருக்கி இயன்ற அளவில் முயலும் என்று தெரிவித்தார்.