கம்போடிய தலைமை அமைச்சருடன் ஷி ச்சின்பிங் சந்திப்பு
2023-09-15 16:31:58

சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள கம்போடிய தலைமை அமைச்சர் ஹுன் மானேட்டுடன் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் செப்டம்பர் 15ஆம் நாள் முற்பகல் மக்கள் மாமண்டபத்தில் சந்திப்பு நடத்தினார்.

தலைமை அமைச்சராக ஹுன் மானேட் பதவியேற்ற பிறகு முதலில் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ள தெரிவு செய்தது என்பது, சீனாவுடன் நட்புறவை வலுப்படுத்தி வளர்ப்பதற்கு புதிய கம்போடிய அரசு அளிக்கும் அதிக முக்கியத்துவத்தை முழுமையாக வெளிப்படுத்துகிறது. இருநாட்டுத் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 65 ஆண்டுகளில் இருதரப்பும் எப்போதுமே பரஸ்பர நம்பிக்கையுடன் ஒன்றை ஒன்று சமமான நிலையில் நடத்தி, ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறும் வகையில் செயல்பட்டு வருகின்றன என்று ஷி ச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.

கம்போடிய மன்னர் ஹுன் செனுக்கு உளமார்ந்த வணக்கத்தை தெரிவிக்குமாறு ஹுன் மானேட்டிடம் ஷி ச்சின்பிங் கேட்டுக் கொண்டதோடு, கம்போடியாவுடன் இணைந்து சீனா-கம்போடியா பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தை மேம்படுத்த சீனா விரும்புகிறது என்றும் தெரிவித்தார்.

மேலும், சர்வதேச மற்றும் பிரதேச நிலைமை எவ்வாறு மாறினாலும், கம்போடியாவின் நம்பத்தக்க நண்பராகவும், உறுதியான ஆதரவாளராகவும் சீனா திகழ்கிறது. கம்போடியாவுடன் சேர்ந்து, சர்வதேச சமத்துவம் மற்றும் நீதியையும் வளரும் நாடுகளின் சட்டப்பூர்வ உரிமை நலன்களையும் பேணிக்காக்க சீனா விரும்புகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒரே சீனா கொள்கையைப் பின்பற்றும் கம்போடியா, சீனா தனது மைய நலன்களைப் பேணிக்காப்பதற்கும், அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முன்வைத்த முன்னெடுப்புகளுக்கும் ஆதரவளிக்கிறது என்று ஹுன் மானேட் கூறினார். நீண்டகாலமாக கம்போடியன் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்குப் பெரும் ஆதரவு மற்றும் உதவிகளை வழங்கி வரும் சீனாவுக்கு நன்றி தெரிவிப்பதோடு, சீனாவுடன் இணைந்து பிரதேச மற்றும் சர்வதேச விவகாரங்களில் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, இருதரப்பு உறவை புதிய நிலைக்கு முன்னேற்ற கம்போடியா விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.