வட்டி விகிதத்தை 5.25முதல் 5.5சதவீதம் வரையில் மாறாமல் வைத்துள்ள அமெரிக்கா
2023-09-21 11:00:45

அமெரிக்காவின் வட்டி விகிதம் 5.25 சதவீதம் முதல் 5.5 சதவீதம் வரையிலான வரம்பை நிலைநிறுத்துவதாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி 20ஆம் நாள் நிறைவு பெற்ற நாணயக் கொள்கைக் கூட்டத்தில் அறிவித்தது.

அண்மைக்கால புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்கப் பொருளாதாரச் செயல்பாடு நிலைப்புத்தன்மையுடன் விரிவாகியுள்ளது. வேலை வாய்ப்பு வளர்ச்சி விகிதம் குறிப்பிட்டளவில் குறைந்தாலும், இன்னும் வலுவாக உள்ளது. அதே வேளை பணவீக்கம் இன்னும் உயர் நிலையில் நிலவி வருகிறது என்று அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி அன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அதே நாள், பொருளாதார வளர்ச்சி எதிர்காலம் பற்றிய புதிய அறிக்கையை அமெரிக்க பெட்ரல் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இவ்வாண்டு மற்றும் அடுத்தாண்டுக்கான அமெரிக்க பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்பீடு முறையே 2.1 சதவீதம் மற்றும் 1.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பின்மை விகிதம் முறையே 3.8 சதவீதம் மற்றும் 4.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.