பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் பற்றி பல தரப்புகளின் கருத்து மற்றும் நடவடிக்கைகள்
2023-11-04 17:10:24

போர் நிலைமையை இஸ்ரேல் முழு வேகத்தில் முன்னேற்ற உள்ளதாக அந்நாட்டின் தலைமை அமைச்சர் நெதன்யஹு நவம்பர் 3ஆம் நாள் தெரிவித்தார். அதேநாள் லெபனானின் ஹிஸ்புல்லா கட்சித் தலைவர் நடப்பு பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் பற்றி முதன்முறையாக உரை நிகழ்த்துகையில், காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தா விட்டால், இம்மோதல் பிரதேச மோதலாக மாறக் கூடும் என்று எச்சரித்தார்.

இதனிடையே, மத்திய கிழக்குப் பகுதியில் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் 3ஆம் நாள் இஸ்ரேலின் டெல் அவீவ் நகரில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், மனிதநேய இடைநிறுத்தம், இஸ்ரேல் தலைவர்களுடன் விவாதிக்கும் அம்சங்களில் முக்கியமான ஒன்று என்று தெரிவித்தார். 4ஆம் நாள் ஜோர்டனில், ஜோர்டான், சௌதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

மேலும், காசாவிலுள்ள பிரான்சு கலை மையம் இஸ்ரேலின் தாக்குதலுக்குள்ளானது. இது குறித்து இஸ்ரேல் விளக்கம் அளிக்குமாறு பிரான்சு கோரியுள்ளது என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் 3ஆம் நாள் கூறியது.

தவிரவும், இஸ்ரேலுக்கான ஹோண்டுராஸ் தூதரைத் திரும்ப அழைப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் சமூக ஊடகத்தில் தகவல் வெளியிட்டார்.