வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கு வழங்கிய காலநிலை ஏற்பு நிதி போதாது:ஐ.நா.
2023-11-08 17:40:48

காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப வளரும் நாடுகளுக்கு உதவுவதற்கு, தற்போது வளர்ந்த நாடுகள் திரட்டிய நிதி போதுமானதாக இல்லை. கணிப்பின்படி இத்தொகை வளரும் நாடுகளுக்குத் தேவையான அளவின் பத்தில் ஒரு பகுதி முதல் 18இல் ஒரு பகுதி வரையில் இருக்கும் என்று ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட அலுவலகம் புதிதாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போது காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப வளரும் நாடுகளுக்கு ஆண்டுதோறும் 21 ஆயிரத்து 500 கோடி முதல் 38 ஆயிரத்து 700 கோடி அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது. ஆனால், 2021ஆம் ஆண்டில் வளர்ந்த நாடுகளிலிருந்து கிடைத்த ஏற்பு நிதி சுமார் 2100 கோடி டாலர் மட்டும். இது 2020ஆம் ஆண்டை விட 15 விழுக்காடு குறைவு என்று 2023ஆம் ஆண்டு ஏற்பு இடைவெளி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

2009ஆம் ஆண்டில் நடைபெற்ற காலநிலை மாற்றத்துக்கான ஐ.நா. மாநாட்டில், 2020ஆம் ஆண்டு வரை ஆண்டுதோறும் வளரும் நாடுகளுக்கு 10 ஆயிரம் கோடி நிதி ஆதரவு வழங்குவதாக வளர்ந்த நாடுகள் வாக்குறுதியளித்தன. ஆனால் இதுவரை இவ்வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.