© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
அமெரிக்காவின் உள்ளூர் நேரப்படி நவம்பர் 15ஆம் நாள் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் சான் ஃப்ரான்சிஸ்கோவிலுள்ள ஃபிலோலி பண்ணைத் தோட்டத்தில் அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடனுடன் சந்திப்பு நடத்தினார். இச்சந்திப்புக்குப் பிறகு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ ஊடகங்களிடம் தொடர்புடைய நிலைமை பற்றி விளக்கம் அளித்து, கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
சர்வதேச சமூகத்தின் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள இந்தச் சந்திப்பின் தனிச்சிறப்பு பற்றி வாங் யீ கூறுகையில், இருநாட்டு அரசுத் தலைவர்கள் நல்ல சந்திப்பு நடத்தி, விரிவாகவும் ஆழ்ந்த முறையிலும் உரையாடினர். நெடுநோக்கு தன்மை, வரலாற்று முக்கியத்துவம், வழிகாட்டுதல் தன்மை ஆகியவை இச்சந்திப்பின் 3 சிறப்பம்சங்களாகும் என்று தெரிவித்தார்.
இருதரப்பு சந்திப்புக்காக அமெரிக்க அரசுத் தலைவர் பைடன் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கிற்கு சிறப்பாக அழைப்பு விடுத்தார். இது ஏபெக் காலத்தில் நடைபெறும் இருதரப்பு சந்திப்பிலிருந்து வேறுபட்டது. மேலும், சீன-அமெரிக்க உறவு முக்கிய கட்டத்தில் இருக்கும் பின்னணியில் இச்சந்திப்பு நடத்தப்பட்டது. 6 ஆண்டுகளுக்குப் பிறகு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அமெரிக்காவில் பயணம் மேற்கொள்வதும், ஓராண்டுக்குப் பிறகு இருநாட்டு அரசுத் தலைவர்கள் நேரில் சந்திப்பு நடத்துவதும், இருநாட்டு அரசுத் தலைவர்கள் தூதாண்மை உறவின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் மதிப்பை வெளிப்படுத்தியுள்ளன. இது, இருநாட்டுறவு வரலாற்றில் மைல் கல்லாகவும், தற்போதைய சர்வதேச தொடர்புகளில் முக்கிய நிகழ்வாகவும் மாறுவது உறுதி. 4 மணிநேரம் தொடர்ந்த இச்சந்திப்பில் இருநாட்டு அரசுத் தலைவர்கள் கருத்து வேற்றுமையைக் கட்டுப்படுத்துவது, பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பை முன்னேற்றுவது உள்ளிட்ட முனைப்பான விவகாரங்கள் குறித்து வழிகாட்டல் தன்மை வாய்ந்த கருத்துகளைத் தெரிவித்ததோடு, பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல், உக்ரைன் நெருக்கடி, காலநிலை மாற்றம், செயற்கை நுண்ணறிவு போன்ற உலகளாவிய சவால்கள் பற்றியும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இருநாடுகள் ஒன்றுடன் ஒன்று பழகும் சரியான முறையை விவாதித்து, இருநாடுகள் கூட்டாக ஏற்க வேண்டிய பொறுப்புகளைத் தெளிவுபடுத்தி, இருநாட்டுறவின் சீரான வளர்ச்சிக்கு அவர்கள் திசை காட்டி, திட்ட வரைவையும் தீட்டினர் என்று வாங் யீ கூறினார்.
நடப்புச் சந்திப்பில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் விளக்கிக் கூறிய சீனாவின் நிலைப்பாடு பற்றி வாங் யீ பதிலளிக்கையில், சீன-அமெரிக்க உறவை நிலையாக மேம்படுத்துவதில் சீனாவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் விளக்கிக் கூறினார். முதலில் சரியான தெரிவு செய்ய வேண்டும். இரண்டாவதாக ஒன்றுடன் ஒன்று பழகும் சரியான முறையைக் கண்டறிய வேண்டும். மூன்றாவதாக சான் ஃப்ரான்சிஸ்கோ விருப்பக் காட்சியை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
நடப்புச் சந்திப்பில் எட்டப்பட்ட ஒத்த கருத்து மற்றும் சாதனைகள் பற்றி வாங் யீ கூறுகையில், நடப்பு சந்திப்பின் சாதனைகள் பல துறைகளில் காணப்படுகின்றன. அரசியல் மற்றும் தூதாண்மை, மக்கள் தொடர்பு மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றம், உலகளாவிய மேலாண்மை, இராணுவப் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் 20க்கும் மேற்பட்ட ஒத்த கருத்துகள் எட்டப்பட்டுள்ளன. மேலும், சான் ஃப்ரான்சிஸ்கோ சந்திப்பின் சாதனைகளைச் நடைமுறைப்படுத்த, இருதரப்பும் உயர்நிலை தொடர்புகளையும் பயணங்களையும் தொடர்ந்து மேற்கொள்வதற்கு இருநாட்டு அரசுத் தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
இருநாடுகளின் கருத்து வேற்றுமை மற்றும் முக்கியமான விவகாரங்களில் சீனாவின் நிலைப்பாடு பற்றிய கேள்விக்கு வாங் யீ பதிலளிக்கையில், சீன-அமெரிக்க உறவில், தைவான் பற்றிய கேள்வி மிக முக்கியமான ஒன்று. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் சீனாவின் கொள்கை மற்றும் நிலைப்பாட்டை விளக்கிக் கூறியதோடு, ஒரே சீனா என்ற கொள்கையை அமெரிக்கா பின்பற்றுமாறு கோரியுள்ளதாக தெரிவித்தார். மேலும், பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் அறிவியல் தொழில் நுட்பம் தொடர்பான விவகாரங்களில் சீனாவின் நிலைப்பாட்டையும் அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் தெளிவுபடுத்தி, இத்துறைகளில் சீனா மீது தடை விதிக்கும் செயல் இடர்பாடுகளை ஏற்படுத்தி வருவதை சுட்டிக்காட்டியதாக வாங் யீ கூறினார்.
சான் ஃப்ரான்சிஸ்கோ சந்திப்பானது, இருநாட்டுறவில் நம்பிக்கையை அதிகரித்து ஐயங்களை நீக்குவது, கருத்துவேற்றுமையைக் கட்டுப்படுத்துவது, ஒத்துழைப்புகளை விரிவாக்குவது ஆகியவற்றுக்கு முக்கயத்துவம் வாய்ந்த சந்திப்பாகும். மாறி வரும் உலகில் உறுதித்தன்மையை ஊட்டி, நிலைத்தன்மையை அதிகரிக்கும் முக்கிய சந்திப்பும் இதுவாகும். சான் ஃப்ரான்சிஸ்கோ முற்றுப்புள்ளிக்கு மாறாக புதிய துவக்கப் புள்ளியாக இருக்க வேண்டும். சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சரியான அணுகுமுறை கண்டறியப்படும் என நம்புகிறோம் என்றும் வாங் யீ தெரிவித்தார்.