பார்த்தீனான் கோயிலின் சிற்பங்களைத் திருப்பி கொடுக்க வேண்டும்: கிரேக்க தலைமையமைச்சர் பிரிட்டனுக்கு கோரிக்கை
2023-11-27 15:02:20

பிரிட்டிஷ் தலைமையமைச்சர் ரிஷி சுனக், பிரிட்டன் தொழிலாளர் கட்சி தலைவர் ஸ்டார்மர் ஆகியோருடன் சந்திப்பு நடத்தும் போது, கிரேக்கத்தின் பார்த்தீனான் கோயிலுக்குச் சொந்தமான பளிங்கு சிற்பங்களை பிரிட்டிஷ் அருங்காட்சியகம் கிரேக்கத்திடம் திருப்பி தருவது குறித்து விவாதிக்கவுள்ளதாக கிரேக்கத்தின் தலைமையமைச்சர் மிட்சோட்டகிஸ் தெரிவித்தார்.

26ஆம் நாள் தொடங்கி பிரிட்டனில் பயணம் மேற்கொண்டுள்ள அவர், பி.பி.சி.க்கு சிறப்பு பேட்டி அளித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.

இப்பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் திருப்திகரமாக இல்லை என்ற போதிலும், தனக்குப் பொறுமை உள்ளதாகவும், கிரேக்கமும் 200 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்பதாகவும் மிட்சோட்டகிஸ் தெரிவித்தார்.

இந்தத் தொல்பொருட்கள் யாருக்கு சொந்தமானது என்பது குறித்து சர்ச்சை இல்லை. இவை கிரேக்கத்துக்குச் சொந்தமானவை, கிரேக்கத்தில் இருந்து திருட்டப்பட்டுள்ளன என்றும் மிட்சோட்டகிஸ் பேட்டியளித்தபோது குறிப்பிட்டார்.