சீனாவின் சி.எம்.ஜி.க்குப் பேட்டி அளித்த கியூபா தலைமையமைச்சர் மாரேரோ
2023-12-04 11:24:32

கியூபா தலைமையமைச்சர் மாரேரோ சமீபத்திய நாட்களில் சீனாவின் பெய்ஜிங், ஷாங்காய், சேஜியாங் ஆகிய இடங்களில் பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தின் போது, அவர் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டி அளித்தார். அதில், சீனாவுக்கும் கியூபாவுக்கும் இடையே கூடிய விரைவில் நேரடி விமானச் சேவை தொடங்கவுள்ளதை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு சுற்றுலா தொழிலின் பங்களிப்பு தொடர்பாக அவர் குறிப்பிட்டதாவது, நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்ற உத்திநோக்கு பார்வையுடன் கூடிய ஒரு திட்டமாக சுற்றுலா வளர்ச்சியை முன்னெடுக்க கியூபா முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சுற்றுலா வளர்ச்சியில் கியூபா மாபெரும் உள்ளாற்றல் கொண்டது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், தனிச்சிறப்புடைய இயற்கைச் சூழல் மட்டுமின்றி, உற்சாகமாக வரவேற்கும் மக்களும் அந்நாட்டில் உள்ளதாகக் கூறினார்.  மேலும், பொருளாதார தடைக்கு எதிராகப் போராடி, தீர்வு காண பாடுபட்டு வருவதாகவும், கியூபாவுக்கான பன்னாட்டு விமானச் சேவைகளை அதிகரிக்க முயற்சித்து வருவதாகவும் அவர்  தெரிவித்தார்.

தவிர, அடுத்த ஆண்டு சீனாவின் பயணச் சொகுசு கப்பல்கள் ஹவானா துறைமுகத்தில் தங்கவும், அவை கரீபியன் கடலில் பயணிக்கவும் வழி செய்யும் விதமாக, முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் மாரேரோ பேட்டி அளித்தபோது தெரிவித்தார்.