காலநிலை மாற்றத்துக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கை உருவாக்கம்
2023-12-16 19:59:37

COP28 எனும் காலநிலை மாற்றத்துக்கான ஐ.நா. கட்டுக்கோப்பு ஒப்பந்த தரப்புகளின் 28ஆவது மாநாடு அண்மையில் நிறைவுற்றது. இதில், UAE கருத்தொற்றுமை உருவாக்கப்பட்டது. COP28 மாநாட்டின் சாதனையாக, இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கையாகும் எனவும், அது எட்டப்பட்டது எளிதல்ல எனவும் உலக ஊடகங்கள் பொதுவாகக் கருதுகின்றன.

புதைபடிவ எரிபொருளிலிருந்து மாறுவது குறித்த உடன்படிக்கையை எட்டுவது இதுவே முதன்முறை என்பதால், UAE கருத்தொற்றுமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. புதைபடிவ எரிபொருளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தொடக்கம் இதுவாகும் என்று காலநிலை மாற்றத்துக்கான ஐ.நா. கட்டுக்கோப்பு ஒப்பந்தத்தின் நிர்வாகச் செயலாளர் கூறினார்.

COP28 மாநாட்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கை எட்டப்பட்டதற்கு, சீனா மற்றும் அமெரிக்காவின் ஒத்துழைப்பு, குறிப்பாக இருநாடுகளின் உச்சநிலை முயற்சி இன்றியமையாதது. இவ்விரு நாடுகளின் அரசுத் தலைவர்கள் சான் பிரன்சிஸ்கோவில் சந்திப்பு நடத்திய போது, COP28 மாநாடு வெற்றி பெற முயற்சிகளை மேற்கொள்வதாகத் தெரிவித்தனர். ஒத்துழைப்புக்கான ஆக்கமுள்ள மனநிலை, உலக காலநிலை மாற்றச் சமாளிப்புக்கு இயக்காற்றலை ஊட்டியுள்ளது என்று குறிப்பிட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, கரி குறைந்த பசுமையான வளர்ச்சி, உலகின் கருத்தொற்றுமையாக மாறியுள்ளது. பல்வேறு நாடுகளும் இதற்காக அதிக முயற்சிகளை மேற்கொண்டு, ஓரளவு முன்னேற்றம் அடைந்துள்ளன. இருப்பினும், கடுமையான காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நிலையில், நடப்பு மாநாட்டின் சாதனைகளை எப்படி செயல்படுத்துவது என்பது மிக முக்கியமானது. இதற்காக, நிதித்திரட்டலுக்கான வாக்குறுதியை வளர்ந்த நாடுகள் கூடியவிரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், காலநிலை மாற்றத்தைப் பயன்படுத்தி வர்த்தகம் மற்றும் முதலீட்டின் மீது தடை விதிக்கும் அனைத்து செயல்களையும் பல்வேறு தரப்புகளும் கூட்டாக எதிர்க்க வேண்டும்.