தைவானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதற்குச் சீனா எதிர்ப்பு
2024-01-09 10:13:54

சீன மக்கள் குடியரசின் வெளிநாட்டுத் தடைகளுக்கு எதிரான சட்டத்தின் படி, அமெரிக்காவைச் சேர்ந்த ஐந்து பாதுகாப்பு தொழில் நிறுவனங்களின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. தைவான் பிரச்சினையில் சீனாவின் உள் விவகாரத்தில் தலையிடும் அமெரிக்கர் சிலருக்கு இத்தடை நடவடிக்கை கடுமையான எச்சரிக்கையாகும் என்று சீன வெளியுறவு அமைச்சகம் 7ஆம் நாள் அறிவித்தது.

தைவானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதால் அந்த ஐந்து அமெரிக்க இராணுவ நிறுவனங்களின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது.

2023ஆம் ஆண்டின் டிசம்பர் நடுப்பகுதியில், 30 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள உபகரணங்களை தைவானுக்கு விற்பனை செய்வதற்கான ஒப்புதலை அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. தற்போதைய அமெரிக்க அரசு பதவியேற்ற பிறகு, தைவானுக்கு ஆயுதங்களை 12ஆவது முறையாக விற்பனை செய்தது.

ஒரே சீனா என்ற கோட்பாட்டையும் சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான மூன்று கூட்டறிக்கைகளையும் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற சீன-அமெரிக்கத் தலைவர்களின் சந்திப்பில் அமெரிக்கத் தலைவர் அளித்த அரசியல் வாக்குறுதியையும் அமெரிக்காவின் இச்செயல் மீறியது.

தைவான் பிரச்சினை, சீனாவின் முக்கிய நலன்களின் மையமாகும். இதுவும் சீன-அமெரிக்க உறவின் அரசியல் அடிப்படையின் அடிப்படையாகும் என்று சீனா பல முறை அறிவித்தது.

தைவானுக்கு அமெரிக்கா எத்தனை ஆயுதங்களை வழங்கினாலும், சீனாவின் ஒன்றிணைப்பின் வரலாற்று வளர்ச்சிப்போக்கை நிறுத்த முடியாது என்பதை உண்மை நிரூபிக்கும்.