சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பிரதிநிதிக் குழுவின் கம்போடிய பயணம்
2024-01-15 09:22:35

கம்போடிய மக்கள் கட்சியின் அழைப்பேற்று, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறை அமைச்சருமான லீ ஷூலேயின் தலைமையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சிப் பிரதிநிதிக் குழு ஜனவரி 13, 14ஆம் நாட்களில் கம்போடியாவில் பயணம் மேற்கொண்டது. கம்போடிய மக்கள் கட்சித் தலைவர் ஹுன் செனின் சிறப்புப் பிரதிநிதியும், துணை அரசுத் தலைவரும், கம்போடிய மன்னரின் உயர் நிலை ஆலோசகருமான டீ பான், அந்நாட்டின் மக்கள் கட்சி மத்திய கமிட்டி நிரந்த உறுப்பினரும், அரசுப் பணியாளர் துறை அமைச்சருமான ஹுன்மணி முதலியோரை இப்பிரதிநிதிக் குழு சந்தித்து, கம்போடிய தலைவர்களுடன் 2024ஆம் ஆண்டு சீன-கம்போடிய மானிடப் பண்பாட்டியல் பரிமாற்ற ஆண்டின் துவக்க விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றது.

சந்திப்பின் போது லீ ஷூலேய் கூறுகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மற்றும் கம்போடிய தலைவரின் நெடுநோக்கு வாய்ந்த தலைமையில், சீன-கம்போடிய பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானம் உயர் தரம், உயர் நிலை மற்றும் உயர் வரையறையுடன் கூடிய புதிய யுகத்தில் நுழைந்துள்ளது. கம்போடிய தரப்புடன் இணைந்து இரு நாட்டுத் தலைவர்களின் முக்கிய ஒருமித்த கருத்துக்களை நடைமுறைப்படுத்தி ஆட்சி முறை அனுபவங்களின் பரிமாற்றத்தை வலுப்படுத்தி மனித குலத்தின் பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தில் முன்மாதிரியை உருவாக்க சீனா விரும்புகிறது என்றார்.