2023இல் உலகளவில் முதலிடம் முதன்முறை பெற்ற சீனாவின் வாகன ஏற்றுமதி
2024-01-19 15:39:39

சீன அரசவையின் செய்தி அலுவலகம் 19ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் 2023ஆம் ஆண்டு சீனாவின் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி நிலைமை பற்றி அறிமுகப்படுத்தப்பட்டது.

2023ஆம் ஆண்டு சீன வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை எண்ணிக்கை முறையே 3கோடியே ஒரு லட்சத்து 61ஆயிரம் மற்றும் 3கோடியே 94ஆயிரத்தை எட்டியுள்ளது. இது, கடந்த ஆண்டில் இருந்ததை விட, முறையே 11.6விழுக்காடு மற்றும் 12விழுக்காடு அதிகரித்து வரலாற்றில் புதிய பதிவை உருவாக்கியுள்ளது.  இத்துறையில் சீனா கடந்த 15ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக உலகளவில் முதலிடத்தை வகித்து வருகின்றது.

அவற்றில் வாகனங்களின் ஏற்றுமதி எண்ணிக்கை 49லட்சத்து 10ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இது கடந்த ஆண்டில் இருந்ததை விட, 57.9விழுக்காடு அதிகரித்து உலகளவில் முதலிடத்தை முதன்முறையாகப் பெற்றுள்ளது என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனத் தயாரிப்புத் தொழிலின் அதிகரிப்பு மதிப்பு கடந்த ஆண்டை விட, 13விழுக்காடு அதிகமாகும். மேலும், சீனாவின் புதிய எரியாற்றல் வாகனம் தொடர்ந்து உலகளவில் முன்னணியில் இருப்பதோடு அதன் உற்பத்தி மற்றும் விற்பனை எண்ணிக்கை முறையே 95லட்சத்து 87ஆயிரம் மற்றும் 94லட்சத்து 95ஆயிரத்தை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டில் இருந்ததை விட, முறையே 35.8விழுக்காடு மற்றும் 37.9விழுக்காடு அதிகமாகும்.