பாகிஸ்தான்-ஈரான் உறவு மீட்பு
2024-01-20 17:24:53

பாகிஸ்தான்-ஈரான் உறவை மீட்பது இரு நாட்டு பொது நலனுக்குப் பொருந்தியது என்று பாகிஸ்தானின் இடைக்கால அரசுத் தலைமையமைச்சர் அன்வார் உல்ஹக் ககார் 19ஆம் நாள் தெரிவித்தார்.

நேற்று பாகிஸ்தான் அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் மேற்கூறிய கருத்தைத் தெரிவித்தார் என்று பாகிஸ்தான் தலைமையமைச்சர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான்-ஈரான் உறவு நீண்டகால வரலாற்றையும் பரஸ்பர நட்பையும் கொண்டுள்ளது. சில நடவடிக்கைகளின் மூலம் இருநாட்டுறவு ஜனவரி 16ஆம் நாளுக்கு முந்தைய நிலைமைக்குத் திரும்புவது இரு நாடுகளின் நலனுக்கு பொருந்தியது. இதற்காக ஈரான் மேற்கொண்ட அனைத்து ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளுக்கும் பாகிஸ்தான் வரவேற்பு தெரிவித்து, பதில் அளிப்பதாக ககார் குறிப்பிட்டார்.

19ஆம் நாள் நடைபெற்ற பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆணையக்கூட்டத்துக்கும் அவர் தலைமை தாங்கினார். பேச்சுவார்த்தை மற்றும் தூதாண்மை வழிமுறை மூலம், ஈரானுடன் சில சிறிய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமென இக்கூட்டம் முடிவு செய்துள்ளது. மேலும், இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, நிலைமையைத் தணிப்பதற்கு ஒத்த கருத்தை உருவாக்கியுள்ளனர் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.