தாய்லாந்து தலைமையமைச்சர்-சீன வெளியுறவு அமைச்சர் சந்திப்பு
2024-01-29 18:39:23

தாய்லாந்து தலைமையமைச்சர் ஸ்ரெட்டா (Srettha) ஜனவரி 29ஆம் நாள் பாங்காக்கில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீயைச் சந்தித்தார்.

சந்திப்பின் போது வாங் யீ கூறுகையில், தாய்லாந்து இப்பிரதேசத்தின் முக்கிய நாடாகும். பிரதேச நிலைத்தன்மை மற்றும் உலக அமைதிக்காக தாய்லாந்து ஆக்கப்பூர்வ பங்காற்றியுள்ளதைக் கண்டு சீனா மகிழ்ச்சியடைகின்றது என்று தெரிவித்தார்.

இரு நாட்டு அரசுத் தலைவர்கள் உருவாக்கிய பொது கருத்துக்களைச் செயல்படுத்தி, பல்வேறு துறைகளில் இரு தரப்புகள் ஒத்துழைப்பை முன்னேற்றுவது தனது தாய்லாந்து பயணத்தின் நோக்கமாகும் என்று வாங் யீ தெரிவித்தார். தாய்லாந்துடன் இணைந்து உயர் நிலை பரிமாற்றத்தை நிலைநிறுத்தி, பண்பாட்டுத் தொடர்பை நெருக்கமாக்கி, ஒன்றுக்கொன்று விசா இல்லா கொள்கையை வாய்ப்பாக கொண்டு இரு நாட்டு சுற்றுலா துறையின் வளர்ச்சியை விரைவுபடுத்தி, பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட துறைகளில் எதார்த்த ஒத்துழைப்பை ஆழமாக்க சீனா விரும்புவதாக வாங் யீ தெரிவித்தார்.

சீனாவுடனான உறவில் தாய்லாந்து உயர்வாக கவனம் செலுத்துவதாக ஸ்ரெட்டா தெரிவித்தார். அடுத்த ஆண்டு தாய்லாந்து-சீனா தூதாண்மை உறவு நிறுவப்பட்டதன் 50ஆம் ஆண்டு நிறைவாகும். இரு தரப்பும் பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, இரு நாட்டுறவு மேலும் வளர்ச்சியடைவதை முன்னேற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.