செங்கடல் நிலைமை பற்றி சீனா கருத்து
2024-01-30 18:58:31

தற்போதைய செங்கடல் நிலைமை குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் 30ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், செங்கடல் நிலைமை தீவிரமாகுவதை சீனா விரும்பவில்லை என்று தெரிவித்தார். ராணுவசார்பற்ற கப்பல்கள் மீது தாக்குதலும் தடங்கலும் ஏற்படுத்தும் செயலை உடனடியாக நிறுத்தி, ஏமன் உள்ளிட்ட செங்கடலோர நாடுகளின் அரசுரிமையை மதிக்க வேண்டும் என சீனா வேண்டுகோள் விடுப்பதாகவும் பல்வேறு தரப்புகளுடன் இணைந்து செங்கடல் நிலைமையைத் தணிவுபடுத்துவதற்கு ஆக்கப்பூர்வ பங்காற்ற சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், செங்கடலோரப் பகுதி, முக்கிய சர்வதேச சரக்கு மற்றும் எரியாற்றல் வர்த்தக வழியாகும். காசாவில் போரை விரைவில் நிறுத்துவது, செங்கடல் நிலைமையைத் தணிவுபடுத்துவதற்கு உதவும், காசாவில் மோதலில் சிக்கிக்கொண்ட பல்வேறு தரப்புகள், ஐ.நா பாதுகாப்பவை மற்றும் ஐ.நா பேரவையின் தொடர்புடைய தீர்மானத்தைச் செயல்படுத்தி, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் எனவும் சர்வதேச சமூகம் இதற்காக சமரசம் செய்ய வேண்டும் எனவும் சீனா வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்தார்.