செல்போன் உதிரிபாகங்களுக்கு வரிச் சலுகை – இந்தியா
2024-01-31 17:08:11

இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் முக்கியமான செல்போன் உதிரிபாகங்களுக்கான சுங்கவரியில் 10 முதல் 15 விழுக்காடு வரை நீக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

செல்போன் உதிரிபாகங்கள் இறக்குமதியில் உள்ள வரி விதிப்பில், பிற நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு உள்ளதாக இந்திய செல்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சங்கம் அரசிடம் அறிக்கை அளித்தது. செல்போன் உதிரிபாகங்களுக்கான அதிக வரி விதிப்பினால் அதன் இறுதி விலையும் அதிகரித்துள்ளது என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து இவ்வரிச் சலுகை கொள்கை அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசின் இம்முடிவினால் உள்நாட்டு செல்போன் தயாரிப்பு நிறுவனங்களின் போட்டித் தன்மையை அதிகரிப்பதுடன், ஆப்பிள், சேம்சங் போன்ற நிறுவனங்களின் ஏற்றுமதியும் அதிகரிக்கும் என்று எகனாமிக் டைம்ஸ் நாளேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.