செங்கடல் பதற்ற நிலைமை சூயஸ் கால்வாய் வருமானம் அதிக அளவு குறைவு
2024-02-04 19:29:18

செங்கடலில் ஏற்பட்ட பதற்ற நிலைமை காரணமாக, எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாய் வழியாக சென்று வரும் கப்பல்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. சூயஸ் கால்வாய் நிர்வாகம் கடந்த சனிக்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த மாதத்தில் கிடைத்த வருமானம், 2023ஆம் ஆண்டில் இருந்ததை விட சுமார் 50விழுக்காடு குறைந்துள்ளது.

இந்த நிர்வாகத்தின் துணைத் தலைவர் ஒசாமா ராபியா(Osama Rabie) செய்தியாளர்களிடம் கூறுகையில், 2023 ஜனவரியில் 80கோடியே 40இலட்சம் அமெரிக்க டாலர் வருமானம் கிடைத்தது. ஆனால், கடந்த ஜனவரியின் வருமானம் 42கோடியே 80இலட்சம் அமெரிக்க டாலராகக் குறைந்தது என்றார்.

செங்கடல் மற்றும் மத்திய தரைக்கடலை இணைக்கும் சூயல் கால்வாய் மூலம் கிடைக்கும் வருமானம், எகிப்தின் நிதி வருமானம் மற்றும் அன்னிய செலாவணி கையிருப்புக்கு முக்கிய ஆதாரமாகத் திகழ்கின்றது.

கடந்த அக்டோபர் 7-ஆம் நாள் பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே புதிய மோதலை தொடர்ந்து, ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பரப்பில் இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.