எரியாற்றல் துறையில் 67000 கோடி டாலர் முதலீடு – மோடி
2024-02-07 19:16:16

இந்தியாவில் அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் எரியாற்றல் துறையில் 67,000 கோடி டாலர் முதலீடு செய்யப்படும் என்று கோவாவில் செவ்வாய்க்கிழமை துவங்கிய 2ஆவது இந்திய எரியாற்றல் வாரம் நிகழ்ச்சியில் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளினால் உள்நாட்டு எரிவாயு உற்பத்தி அதிகரித்து வருகிறது என்றும் முதன்மை எரியாற்றல் பயன்பாட்டில் எரிவாயுவை 6 விழுக்காட்டிலிருந்து 15 விழுக்காடாக உயர்த்த அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோல், உயிரி எரிபொருள் துறையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் 2014இல் 1.5 விழுக்காட்டிலிருந்த எத்தனால் கலவை 2023இல் 12 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இதனால், 42 மில்லியன் மெட்ரிக் டன் கார்பன் வெளியேற்றம் குறைந்தது. 2025இல் எத்தனால் கலவையை 20 விழுக்காடாக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.