புகையிலை பொருட்களின் சட்டவிரோத வர்த்தகத்தை ஒழிப்பது பற்றிய வேண்டுகோள்
2024-02-14 18:39:52

புகையிலை பொருட்களின் சட்டவிரோத வர்த்தக ஒழிப்பு பற்றிய உடன்படிக்கையில் கையொப்பமிட்ட தரப்புகளின் 3ஆவது கூட்டம் பிப்ரவரி 12ஆம் நாள் பனாமா தலைநகர் பனாமா நகரில் துவங்கியது. உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டேத்ரோஸ் துவக்க விழாவில் காணொளி மூலம் உரை நிகழ்த்திய போது, சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தி, புகையிலை பொருட்களின் சட்டவிரோத வர்த்தகத்தை ஒழிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

புகையிலை பொருட்களின் சட்டவிரோத வர்த்தகத்தினால், பல்வேறு நாடுகளின் வரி வருமானம் பாதிக்கப்படும் அதே வேளையில், இளைஞர்கள் மேலும் எளிதாக புகையிலை பொருட்களால் பாதிக்கப்படுவர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

சட்டவிரோத வர்த்தகம், உலகின் புகையிலை வர்த்தகத்தின் மொத்த தொகையில் சுமார் 11 விழுக்காடு வகிக்கிறது. புகையிலை பொருட்களின் சட்டவிரோத வர்த்தகத்தை ஒழித்தால், உலகின் வரி வருமானம் ஆண்டுக்கு சுமார் 4740 கோடி அமெரிக்க டாலர் அதிகரிக்கும். தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்ற பல்வேறு நாடுகளின் அரசுகளுக்கு மேலதிக நிதி கிடைக்கும் என்று இக்கூட்டத்தின் செய்தி குறிப்பு தெரிவித்தது.

இந்த உடன்படிக்கை, உலக சுகாதார அமைப்பின் புகையிலை கட்டுப்பாட்டு கட்டுக்கோப்பு பொது ஒப்பந்தத்தின் கீழுள்ள முதலாவது உடன்படிக்கையாகும். இது 2018ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக செயல்படுத்தப்பட்டது.