உணவுப் பாதுகாப்பின்மை பிரச்சினையைச் சமாளிப்பதற்கு ஐ.நா தலைமைச் செயலாளர் வேண்டுகோள்
2024-02-14 19:34:22

காலநிலை ஒழுங்கின்மை மற்றும் மோதலினால் ஏற்பட்டுள்ள உணவுப் பாதுகாப்பின்மை பிரச்சினையை சர்வதேச சமூகம் ஆக்கப்பூர்வமாக சமாளித்து, மக்கள் வாழ்வதற்கு ஏற்ற, தொடரவல்ல, பட்டினி மற்றும் போர் சீற்றம் இல்லாத எதிர்காலத்தை உருவாக்க பாடுபட வேண்டும் என்று ஐ.நா தலைமைச் செயலாளர் குட்ரேஸ் 13ஆம் நாள் வேண்டுகோள் விடுத்தார்.

அன்று காலநிலை, உணவு மற்றும் பாதுகாப்பு பற்றிய பாதுகாப்பவையின் உயர் நிலை பொது விவாதக் கூட்டத்தில் அவர் கூறுகையில், காலநிலை மற்றும் மோதல், 2022ஆம் ஆண்டில் சுமார் 17.4 கோடி மக்கள் அவசர உணவு பாதுகாப்பின்மையில் சிக்கிக் கொண்டதற்கு முக்கிய காரணமாகும் என்று தெரிவித்தார்.

சிரியா, காசா பிரதேசம், ஹெய்டி மற்றும் எத்தியோப்பியா ஆகியவற்றை எடுத்துக்காட்டாக கொண்டு, இந்த பிரதேசங்களின் காலநிலை மற்றும் மோதல் பிரச்சினை, கடும் மனித நேய நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

சர்வதேச சமூகம் கூட்டாக முயற்சி மேற்கொண்டால், பட்டினி, காலநிலை ஒழுங்கின்மை, மோதல் ஆகியவை, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை ஒழிக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.