நேட்டோ உறுப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் நிறைவடைந்தது
2024-02-16 18:56:48

ஒரு நாள் நீடித்த நேட்டோ உறுப்பு நாடுகளின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் 15ஆம் நாள் பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்ஸில் நிறைவடைந்தது. நேட்டோவின் தடுப்பு மற்றும் தற்காப்பை வலுப்படுத்தல், உக்ரைனுக்கான ஆதரவு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்துக்கு பின் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் நேட்டோ தலைமைச் செயலாளர் ஸ்டோல்டேன்பெர்க் கூறுகையில், பாதுகாப்பு சூழல் நாளுக்கு நாள் மோசமாகி வந்த போதிலும், நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு எதிரான அவசியமான ராணுவ அச்சறுத்தல் காணப்படவில்லை என்று தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்புக்கான செலவை அதிகரிப்பதில் நேட்டோ “வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றம்” அடைந்துள்ளது. இவ்வாண்டு நேட்டோவின் 18 உறுப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு செலவு, அந்நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 2 விழுக்காடு வகிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக ஸ்டோல்டேன்பெர்க் தெரிவித்தார். தவிர, இக்கூட்டத்தில் வெடிப்பொருட்களின் உற்பத்தி அதிகரிப்பு பற்றி விவாதிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

நேட்டோவின் கூட்டணி நாடுகள், உக்ரைனுக்கு 10 லட்சம் ஆளில்லா விமானங்களை ஒப்படைக்கும் இலக்கை நனவாக்க பாடுபட்டு வருகின்றன என்றும் நேட்டோவின் 20 உறுப்பு நாடுகள் கண்ணி வெடி அகற்றும் கூட்டணியை உருவாக்க ஒப்புக்கொண்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.