பயங்கரவாத அச்சுறுத்தலைச் சமாளிக்க பன்னாட்டுச் சமூகம் ஒற்றுமையுடன் செயல்பட சீனா வேண்டுகோள்
2024-02-16 16:54:16

பயங்கரவாத அறைகூவல்களை சமாளிக்க ஒத்துழைப்புடன் செயல்படுவதன் முக்கியத்துவத்தை ஐ.நாவுக்கான சீன நிரந்தர பிரதிநிதியான ஜாங் ஜுன் 15ஆம் நாள் பயங்கரவாத எதிர்ப்பு குறித்து ஐ.நா. பாதுகாப்பவையின் வெளிப்படையான கூட்டத்தில் வலியுறுத்தினார். அதோடு, எந்த விதமான பயங்கரவாதத்தையும் ஒழித்து, சர்வதேசத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பை கூட்டாக பேணிக்காக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

தற்போது, பன்னாட்டுச் சமூகம் எதிர்கொண்டுள்ள பயங்கரவாத அச்சுறுத்தல் இன்னும் கடுமையாக இருக்கின்றது. இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் தொடர்ச்சியாக தீவிரமாகி வருவதுடன், வெளிப்புறங்களுக்கு ஏற்பட்டுள்ள பின்விளைவு காரணமாக, பல நாடுகளில் வெறுப்புக்குற்றம் பெருமளவில் அதிகரித்து வருகிறது. பயங்கரவாத தாக்குதல் போன்ற அபாயம் அதிகரித்துள்ளது. எனவே, காசா பகுதியில் கூடிய விரைவில் போர்நிறுத்தம் செய்ய வேண்டியது அவசியமானது. சிக்கலான நிலைமை மற்றும் கடினமான கடமையை எதிர்கொண்டு, பன்னாட்டுச் சமுகம் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இயன்றளவில் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்று ஜாங் ஜுன் தெரிவித்தார்.

சர்வதேச அளவில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஐ.நா.வின் முக்கிய மற்றும் ஒருங்கிணைப்பு ரீதியான பங்களிப்பை ஆற்றுவதற்கு பன்னாட்டுச் சமூகம் ஆதரவு அளிப்பதோடு, பாதுகாப்பவை மற்றும் ஐ.நா. பொதுப் பேரவையின் தொடர்புடைய தீர்மானங்களையும் ஐ.நா.வின் உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு தொலைநோக்குத் திட்டத்தையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜாங் ஜுன் கூறினார்.