சுமார் 65% சூடான் மக்கள் மருத்துவ மற்றும் சுகாதார சேவைகளைப் பெறவில்லை:ஐ.நா.
2024-02-19 09:44:18

ஐ.நா.வின் மனிதநேயப் பணிகளை ஒருங்கிணைக்கும் அலுவலகம் 18ஆம் நாள் சூடான் நிலைமை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் சூடானில் 10 மாதங்களுக்கும் மேலாக ஆயுத மோதல் நீடித்து வருவதால், அந்நாட்டில், மனிதாபிமான நெருக்கடி தொடர்ந்து மோசமடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது சூடானில் சுமார் 2 கோடியே 50 இலட்சம் மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, அந்நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேலாகும். அதோடு, இவர்களுள் 1 கோடியே 40 இலட்சத்துக்கும் அதிகமானோர் குழந்தைகள் ஆவர் என்று அந்த அறிக்கை கூறுகின்றது.

சூடானில் மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 70% முதல் 80% வரையான மருத்துவ நிறுவனங்கள் செயல்படவில்லை என்பதால், அந்நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 65% பேர் மருத்துவ மற்றும் சுகாதார சேவைகளைப் பெற முடியாத சூழல் நிலவி வருவதையும் ஐ.நா.வின் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.