பாகிஸ்தானில் கூட்டணி அரசை அமைக்கும்:பாகிஸ்தானின் முக்கிய கட்சிகள்
2024-02-21 10:57:27

பல சுற்று பேச்சுவார்த்தைகளின் மூலம், பாகிஸ்தானின் முக்கிய அரசியல் கட்சியான முஸ்லீம் லீக் கட்சி (ஷெரீப்), மக்கள் கட்சி ஆகியவை பிப்ரவரி 20ஆம் நாளிரவு தலைநகர் இஸ்லாமாபாத்தில் உடன்பாட்டை எட்டி, கூட்டணி அரசை அமைக்க ஒப்புக்கொண்டுள்ளன.

முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைவர், முன்னாள் தலைமையமைச்சருமான முகமது ஷாபாஸ் ஷெரீப், மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான பிலாவால் பூட்டோ ஸர்தாரி ஆகியோர் 20ஆம் நாளிரவு செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டாக நடத்தினர்.

புதிய அரசுத் தலைவருக்குப் போட்டியிட மக்கள் கட்சியின் தலைவரும் முன்னாள் அரசுத் தலைவருமான ஆசிப் அலி ஜர்தாரியைப் பரிந்துரைக்க இரு தரப்பினரும் ஒருமனதாக ஒப்புக்கொண்டனர் என்று ஷாபாஸ் தெரிவித்தார். ஐக்கிய தேசிய இயக்கக் கட்சி, முஸ்லீம் லீக் கட்சி ஆகியவை கூட்டணி அரசை அமைப்பதில் பங்கேற்க ஒப்புக் கொண்டுள்ளன. தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டை விடுவிக்கும் வகையில் கூட்டணி அரசை அமைக்க இரு தரப்பினரும் முடிவு செய்தனர். மேலும் புதிய தலைமையமைச்சருக்குப் போட்டியிட ஷாபாஸை பரிந்துரைக்க மக்கள் கட்சி ஒப்புக்கொண்டது என்று பிலாவால் தெரிவித்தார்.